ஜார்ஜ் டவுன், செப்டம்பர் 1: பினாங்கு துறைமுகப் பகுதியில் தெலுக் பஹாங் ஃபெரி , எம்.வி மெகார் ஜயா (MV Mekar Jaya) கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைந்தனர்.
அந்த விபத்து, நேற்றிரவு மணி 8.40-க்கு நிகழ்ந்ததாக பினாங்கு துறைமுக அதிகாரத்துவத் தரப்பு உறுதிப்படுத்தியது.
தொடக்க தகவலின்படி, எம்.வி மெகார் ஜயா கப்பல் பட்டவொர்த் ஆழ்கடல் துறைமுகத்திலிருந்து , ஸ்வெட்டன்ஹாம் பியர் சுற்றுலா கப்பல் முனையத்தை (Swettenham Pier Cruise Terminal) நோக்கி சென்றுக் கொண்டிருந்தபோது, ஃபெரியுடன் மோதியது.
விபத்துக்குள்ளான ஃபெரி சுல்தான் அப்துல் ஹாலிம் படகு முனையத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் மேற்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பினாங்கு துறைமுக அதிகாரத்துவத் தரப்பின் தலைவர் டத்தோ இயோ சூன் ஹின் தெரிவித்தார்.




