பெட்டாலிங் ஜெயா, செப் 1: நேற்று முன்தினம் காஜாங் அரங்கில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில அளவிலான 69-வது தேசிய தினக் கொண்டாட்டத்தில், அலங்கரிக்கப்பட்ட வாகனப் போட்டியில் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
MBPJ ஊழியர்கள், கலைப்படைப்பைக் கொண்டு நாட்டின் மீதான தேசபக்தியை மிகச் சிறப்பான முறையில் வெளிப்படுத்தியதை அடுத்து, முதலிடத்தை அவர்கள் தட்டிச் சென்றனர்.
பெட்டாலிங் ஜெயா மாநகரத்தின் தனித்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்ட அந்த அலங்கார வாகனம், கொண்டாட்டத்தின் போது பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

ஊழியர்களுக்கிடையிலான கூட்டுப்பணியின் மூலம் , அந்த அலங்கார வாகனம் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தது.

பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த 69-வது மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
அலங்கார வாகனங்கள் மற்றும் அணவகுப்புப் பிரிவினரின் ஊர்வலம், சீருடைப் படையினரின் நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், ஒளி மற்றும் பட்டாசுக்காட்சிகள் மற்றும் 'மெர்டேகா 69' இசைக்கச்சேரி ஆகியவை அவற்றுள் அடங்கும்.
இந்தக் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக, காஜாங்கின் அடையாள உணவான ஒரு லட்சம் சாத்தே (Sate) குச்சிகள் பார்வையாளர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பெட்டாலிங் ஜெயா துணை தலைவர் புவான் ஹஜ்ஜா ஷாரினாஸ் சம்சுடின் அவர்களும் கலந்து கொண்டார்.




