ஷா ஆலாம், செப்டம்பர் 1 : மலேசியா - தாய்லாந்து அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையின் மூலம் 252.2 கிலோகிராம் எடையிலான மெத்தம்பேட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் தாய்லாந்து போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஆகியவற்றுக்கு இடையிலான உளவுத் தகவல் பகிர்வின் மூலம் அந்த பறிமுதல் சாத்தியமானது என பினாங்கு போலீஸ் தலைவர் ட்த்தோ டென்னிஸ் லிம் தெரிவித்தார்.
கடந்த் ஆகஸ்ட் 8-ஆம் தேதி, தாய்லாந்தின் ஹுவா ஹின் மாவட்ட போலீஸ் துறை மேற்கொண்ட சாலை சோதனையில் மலேசிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அந்த ஆடவர் செலுத்திய பிஎம்டபிள்யூ காரை சோதனையிட்டதில் 166 கிலோகிராம் மெத்தம்பேட்டமைன் கண்டறியப்பட்டது.
விசாரணையில், கடத்தல்காரர்கள் வாகனங்களில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச் செல்வதாக மலேசியப் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சிலாங்கூரிலும் பினாங்கிலும் 'ஒப் சோராப்டெரா' (Op Zoraptera ) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த நடவடிக்கையில், பட்டர்வொர்த் தங்கும் விடுதியின் வாகன நிறுத்தத்தில் இருந்த நிசான் டீனா காரில் இருந்து 83 பொட்டலங்களில் அடைக்கப்பட்ட 86.2 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர் நடவடிக்கைகளில் மூன்று உள்ளூர் ஆடவர்கள் மற்றும் ஒரு தாய்லாந்து பெண் என மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
அக்கும்பல் கடந்த ஜூன் மாதம் முதல் மாதத்திற்கு ஒருமுறை தாய்லாந்திலிருந்து மலேசியாவிற்கு போதைப்பொருள் கடத்தி வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் வெறும் கடத்துபவர்களாக மட்டுமே செயல்பட்டு, ஒவ்வொரு பயணத்திற்கும் 6,000 ரிங்கிட்டை கூலியாகப் பெற்றுள்ளனர்.
மலேசியாவில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு 43 லட்சத்து ஆயிரம் ரிங்கிட்டாகும்.
இச்சம்பவம் 1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப் பொருள் சட்டத்தின் செக்க்ஷன் 39 B பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.



