குடும்பத்திற்கு ஏற்ற வேலை நடைமுறை : சிலாங்கூர் ஆய்வு

1 செப்டெம்பர் 2026, 4:32 AM
குடும்பத்திற்கு ஏற்ற வேலை நடைமுறை : சிலாங்கூர்  ஆய்வு

ஷா ஆலம், செப் 1 : குடும்பத்தை உருவாக்க தம்பதியருக்கு வேலை ஒரு தடையாக அமையாமல் இருக்க, சிலாங்கூர் அரசாங்கம், ' குடும்பத்திற்கு ஏற்ற வேலை நடைமுறை' குறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

அந்த ஆய்வு, சிலாங்கூரில் குறைந்திருக்கும் பிறப்பு விகிதப் பிரச்சனையை எதிர்கொள்ள உதவியாக இருக்குமென மகளிர் மேம்பாடு, சமூக நலத்துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி நம்பிக்கைத் தெரிவித்தார்.

அதிகரிக்கும் முதியவர் மக்கட் தொகை , மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பதால் மட்டும் ஏற்படவில்ல; தொடர்ந்து குறைந்து வரும் பிறப்பு விகிதமும் அதற்கு காரணமாகும்.

சிலாங்கூரில் தற்போதைய மொத்த கருவுறுதல் வீதம் (TFR) ஒரு பெண்ணுக்கு சராசரியாக 1.5 முதல் 1.6 குழந்தைகளாக உள்ளது.

இது மக்கட் தொகையை நிலைநிறுத்துவதற்கான மாற்று அளவான 2.1 குழந்தைகளை விட மிகவும் குறைவாகும்.

"நீண்ட கால அடிப்படையில், முதியோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது மட்டுமின்றி, உழைக்கும் வயதை எட்டும் இளைய தலைமுறையினரின் வளர்ச்சியும் மெதுவாக இருக்கும் என்பதை இது குறிக்கிறது.

இந்த நிலைமை, முதியோர்களைச் சார்ந்திருப்பவர்களின் விகிதத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துமென அன்ஃபால் சாரி கூறினார்.

முதியோர் மக்கட் தொகை சவாலை எதிர்கொள்வதற்கான இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS-2) கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மீடியா சிலாங்கூர் நிறுவனத்திற்கு அளித்த எழுத்துப்பூர்வ நேர்காணலில் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் எண்ணம் மாநில அரசுக்கு இல்லை; மாறாக ஒரு குடும்பத்தை உருவாக்கி குழந்தைகளை வளர்க்க விரும்பும் தம்பதியினருக்கான தடைகளைக் குறைக்கவே அரசு விரும்புவதாகவும் அன்ஃபால் கூறினார்.

மகளிர் மேம்பாடு, சமூக நலத்துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி : படம் : மீடியா சிலாங்கூர்

பணியிடங்களில் குழந்தை காப்பகங்களை (Taska) அமைத்தல், நெகிழ்வான வேலை நேரம் (Flexible Working Hours), பராமரிப்பு விடுப்பு (Care Leave) மற்றும் குடும்பத்துக்கு ஆதரவான வேலை நடைமுறையைச் செயல்படுத்துதல் ஆகியவை அந்த முயற்சிகளில் அடங்குமென அவர் கூறினார்.

"சிலாங்கூரில், மாநில அரசு 'குடும்பத்தை உருவாக்குவதற்கு ஏதுவான வேலை நடைமுறைகள்' குறித்த ஆய்வைத் தொடங்கியுள்ளது. இதன் முடிவு மாநில அரசின் கீழ் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் சமர்ப்பிக்கப்படும்.

தம்பதியர் குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதற்கு வேலையோ அல்லது பணியிடமோ ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கான ஒரு தொடக்க நடவடிக்கை அதுவாகும்," என்று அன்ஃபால் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.