குவந்தான், செப்டம்பர் 1 : பகாங், லஞ்சாங்-கிலிருந்து குவந்தான் நோக்கிச் செல்லும் LPT1 கிழக்கு கரை நெடுஞ்சாலையின் 1-இன் 110 -வது கிலோமீட்டரில் 11 வாகனங்களை உட்படுத்திய விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்.
அந்த விபத்து குறித்து நேற்றிரவு மணி 10.44-க்கு அவசர அழைப்பு கிடைத்ததாக பகாங் தீயணைப்பு மீட்பு துறையின் நடவடிக்கை உதவி இயக்குநர் மொஹ்ட் சலாவுடின் இசா தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழந்த இருவர் இரு கார்களில் சிக்கிக் கொண்டவர்கள். அவர்களில் மூவர் ஒரே காரில் பயணித்த ஓர் ஆடவர், பெண் மற்றும் சிறுவன் ஆவர்.மேலுமொருவர் மற்றொரு வாகனத்தில் இருந்த ஆடவர் என சலாவுடின் குறிப்பிட்டார்.
காரில் சிக்கிக் கொண்டவர்களை வெளியே கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் உதவினர். எனினும் அவர்கள் அனைவரும் உயிரிழந்து விட்டதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அந்த விபத்து பேருந்து ஒன்றையும் உட்படுத்தியிருந்தது. எனினும், அதிலிருந்த 30 பயணிகளுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை .



