சுபாங் ஜெயா, ஆகஸ்ட் 31 - 640 மீட்டர் நீளமுள்ள "புலுட் செமங்காட்" (Pulut Semangat) எனும் ஒட்டும் பச்சரிசியைக் கொண்டுத் தயாரிக்கப்பட்ட உணவுப் படைப்பு, ஆசியான் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட அந்த புலுட் உணவு , ஆசியக் கண்டத்தின் முதலாவது மற்றும் மிக நீளமான ஒட்டும் பச்சரிசிப் படைப்பாக சாதனைப் படைத்தது.
சபா, சரவாக், ஜொகூர், பெர்லிஸ், கிளாந்தான் மற்றும் திரங்கானு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 120 பெண்கள் இணைந்து இந்த பிரம்மாண்டச் சாதனையை நிகழ்த்தினர்.

ஆரம்பத்தில் 500 மீட்டர் நீளத்தை மட்டுமே இலக்காகக் கொண்டுத் தொடங்கப்பட்ட இந்த படைப்பு, பங்கேற்பாளர்களின் தீவிர முயற்சியால் இறுதியில் 640 மீட்டர் நீளத்தை எட்டியது.
இந்த சாதனைக்காகச் சுமார் 1.2 டன் புலுட் அரிசி பயன்படுத்தப்பட்டதுடன், அது மலேசிய தேசியக் கொடியான 'ஜாலுர் கெமிலாங்' வண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
மேலும், இந்த அழகியப் படைப்பில் செம்பருத்தி மலர் வடிவங்களும், கைகளால் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களின் மலர் அலங்காரங்களும் இடம் பெற்றிருந்தன.

இதற்கானத் தயாரிப்புப் பணிகள் ஆகஸ்ட் 29-ஆம் தேதி அரிசியைச் சுத்தம் செய்யும் பணிகளுடன் தொடங்கி, ஆகஸ்ட் 30 அன்று சமைக்கும் பணிகளுடன் தொடர்ந்தன.
இந்த முயற்சி மலேசியர்களின் தேசப்பற்றையும் ஒற்றுமையையும் அடையாளப்படுத்துகிறது என இந்த சாதனைக்குப் பின் பேசிய, மலேசியப் பெண் சமையற்கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ரேணுகா தேவி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த சாதனை நிகழ்ச்சி,செரி கெம்பாங்கானில் உள்ள தாமான் யுனிவர்சிட்டி இண்டாவில் நடைபெற்றது.
இந்த பாரம்பரிய புலுட் உணவு வகை மக்களிடையே படிப்படியாக மறக்கப்பட்டு வருவதால், அதன் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நோக்கில் இதனைத் தேர்ந்தெடுத்ததாக சங்கத்தின் துணைத் தலைவர் பாசலினா இஸ்மாயில் தெரிவித்தார்.

செரி கெம்பாங்கான் செர்டாங் சோங் யுவான் கூடைப்பந்து மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த படைப்பை செரி கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் வொங் சியூ கீ நேரில் பார்வையிட்டார்.

இந்த கூட்டு முயற்சி பல்லின மக்களிடையே உள்ள ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதுடன், பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒன்றிணைந்து பொது நன்மைக்காகச் செயல்பட முடியும் என்பதை நிரூபித்துள்ளதாக அவர் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு இனங்களைச் சேர்ந்த பெண் சமையல் ஆர்வலர்கள், தங்களின் பாரம்பரிய சமையல் கலையை மேம்படுத்தவும், புதிய கலைத்திறன்களை வெளிப்படுத்தவும் இந்த தளம் ஒரு சிறந்த அனுபவமாக அமைந்தது என்று தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.







