புத்ராஜெயா, ஆகஸ்ட் 30 : அடுத்தாண்டு, அனைத்து வகை பள்ளிக்கூடங்களின் பராமரிப்புக்கான நிதி ஒதுக்கீடு 50 விழுக்காடு அதிகரிக்கப்படும்.
தற்போது 100 கோடி ரிங்கிட்டாக இருக்கும் ஒதுக்கீட்டு நிதி, 150 கோடி ரிங்கிட்டாக உயர்த்தப்படுமென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தேசியப் பள்ளி, தமிழ் -சீனப் பள்ளிகள், சமயப் பள்ளி, தாஃப்பிஸ், சிறப்புக் கல்வி என அனைத்து வகைப் பள்ளிக்கூடங்களுக்கும் அந்த நிதி பகிர்ந்தளிக்கப்படுமென அவர் கூறினார்.
புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் தேசியத் தின சிறப்புரையில் அவர் அந்த அறிவிப்பைச் செய்தார்.
பள்ளிக்கூட வசதிகளை மேம்படுத்தும் விண்ணப்பங்களை நன்கு ஆராய, அடுத்த மாதம் முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களைப் பார்வையிடும் பணித் திட்டத்தை கல்வியமைச்சு திட்டமிடும்.
அதன் வழி , பள்ளிகூட வசதிகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை முன்கூட்டியே கண்டறிந்து , அப்பணிகள் அடுத்தாண்டு வரை தள்ளிப் போவதைத் தவிர்க்க முடியுமென பிரதமர் கூறினார்.




