கோத்தா கினபாலு,ஆகஸ்ட் 30 : இங்குள்ள கம்புங் லோக் புட்டாவில் (Kg Lok Buta) நீரின் மேல் அமைக்கப்பட்ட கிராம குடியிருப்பில் ஏற்பட்ட தீயில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர்.
இந்தத் தீயில் பலகையிலான நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகின.
அதிகாலை 1.40 மணியளவில் தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு, அவசர அழைப்பு வந்தது. அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது அப்பகுதியே தீப்பிழம்பாகக் காட்சியளித்தது.
தீ உக்கிரமாக எரிந்து வேகமாகப் பரவியதால், அது மேலும் பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் நான்கு வீடுகளை இடித்துத் தள்ள வேண்டியிருந்தது.
தீயை அணைக்க அவர்கள் தங்கள் தீயணைப்பு வாகனத் தண்ணீர் தொட்டிகளுடன், திறந்த கடலையும் முக்கிய நீர் ஆதாரமாகப் பயன்படுத்தினர்.
காலை 6.26 மணியளவில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகக் கோத்தா கினபாலு தீயணைப்பு நிலையத் தலைவர் முகமட் ஹானிஸ் மொக்தார் தெரிவித்தார்.
"அதன் பின்னரே மூன்று பேரைக் காணவில்லை என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது . பிறகு கருகிய நிலையில் மூன்று சடலங்களைக் கண்டெடுத்தோம் ; அவர்களில் ஒருவன் சிறுவன் மேலும் இருவர் சிறுமிகள்கள் ஆவர்," என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
உயிரிழந்த சிறுவர்கள் முகமட் அஸ்ருல் அப்துல்லா (6), நானா அப்துல்லா (4) மற்றும் நுர்பராடிலா முகமது தாஜிஹா (8) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



