ஷா ஆலம், ஆகஸ்ட் 27 - சிலாங்கூர் மாநில தொழில்முனைவோர், ஹிஜ்ரா சிலாங்கூர் அறக்கட்டளை (Yayasan Hijrah Selangor) வழங்கும் 'டானா பாந்தாஸ்' (Dana Pantas) மற்றும் 'டானா நியாகா தானி' (Dana Niaga Tani) திட்டங்களின் கீழ் எவ்வித வட்டி இன்றி 10,000 ரிங்கிட் வரை நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
நிதியுதவிக்கான விண்ணப்பங்களை 'டானா பிளஸ்' (Dana Plus) செயலி மூலம் சமர்ப்பிக்கலாம் .
அந்த விண்ணப்பங்களுக்கு 48 மணி நேரத்திற்குள் விரைவாக ஒப்புதல் வழங்கப்படுமென, அந்த அறக்கட்டளை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த இரு நிதியுதவித் திட்டங்களும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியால் தாக்கல் செய்யப்பட்ட 2-ஆம் கட்ட 'சிலாங்கூர் பொருளாதார ஆற்றலை வலுப்படுத்தும்' (SREP) திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டன.
இதற்காக மொத்தம் RM20 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டங்கள் மூன்று ஆண்டுகள் வரையிலான திருப்பிச் செலுத்தும் காலத்தை வழங்குவதோடு, சிலாங்கூரில் உள்ள சுமார் 2,000 தொழில்முனைவோர் இதன் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
'டானா பாந்தாஸ்' திட்டத்திற்கு, குறைந்தது ஒரு வருடமாவது வணிகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோரும் விண்ணப்பிக்கலாம்.
'டானா நியாகா தானி' திட்டம் குறிப்பாக விவசாயத் துறையின் மேல்நிலை மற்றும் கீழ்நிலை வணிகத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுக்கானது ஆகும்.
இவர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது வணிகத்தை நடத்தியிருக்க வேண்டும்.
இதர நிபந்தனைகளாக, விண்ணப்பதாரர்கள் 18 முதல் 65 வயதுக்குட்பட்ட மலேசியர்களாக இருக்க வேண்டும். மற்றும் சிலாங்கூரில் வசிப்பவராகவும், அங்கேயே வாக்களிப்பவராகவும் இருக்க வேண்டும்.
சிலாங்கூர் தளம் (PLATS) பங்கேற்பாளர்கள் உட்பட புதிய தொழில்முனைவோரும் இதற்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
டானா பாந்தாஸ் மற்றும் டானா நியாகா தானி பற்றிய கூடுதல் விவரங்களை டானா பிளஸ் செயலி மற்றும் ஹிஜ்ரா சிலாங்கூர் இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.



