காத்மாண்டு, ஆகஸ்ட் 27 - நேபாளத்தில் ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த 77 யாத்ரீகர்கள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஆன்மீகத் தலைவர் சத்குருவால் நிறுவப்பட்ட ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த குறைந்தது 77 யாத்ரீகர்கள் நேபாளத்தில் காணாமல் போயிருப்பதை, அந்த அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் மா கம்பீரி உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இந்தக் குழுவினர் கைலாஷ் மானசரோவர் யாத்திரையை முடித்துவிட்டு காத்மாண்டு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.
புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 09:05 மணிக்கு, அறக்கட்டளைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் யாத்திரைக் குழுவின் தலைவர் பிரவீனுடன் பேசினார் என்றும், ஆனால் 10 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது பேச முடியவில்லை என்றும் கூறினார்."
அவரையோ அல்லது வேறு யாரையுமோ எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்த பத்து நிமிடங்களுக்குள் தான் இந்தச் சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகளிடமிருந்து வரும் தகவல்களுக்காக அறக்கட்டளை இன்னும் காத்துக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
காணாமல் போன இந்த குழுவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பல ஐரோப்பிய, ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர் என்றும், அவர்களில் பலர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் நம்பப்படுகிறது.
நேபாள வெள்ளத்தில், இதுவரை 644 சுற்றுப் பயணிகளை தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்தது.
அவர்களில் 178 பேர் இந்திய நாட்டு சுற்றுப் பயணிகள் ஆவர்.
மேலும், தொடர்பில் இல்லாதவர்களில், 127 நேபாள சுற்றுப் பயணிகள், 53 உக்ரேனிய நாட்டவர்கள், 51 மலேசியர்கள், 65 அமெரிக்கர்கள், 35 ஆஸ்திரேலியர்கள், 33 பிரிட்டன் நாட்டவர்கள் ஆகியோரும் அடங்குவர்.
இதனிடையே, அப்பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177 -ஆக அதிகரித்திருப்பதாகவும், 800 பேரைக் காணவில்லை என்றும் நேப்பாள போலீசார் தெரிவித்தனர்.



