பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 27 - கித்தா சிலாங்கூர் ரயில் பாதை (Kita Selangor Rail Line) திட்டத்திற்கான ஆரம்பகட்ட ஆய்வு நிறைவடைந்துள்ளது.
அதையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், நிதி, வணிக மாதிரிகளை உருவாக்குவதில் அடுத்தகட்ட கவனம் செலுத்தப்படுமென சிலாங்கூர் மாநில முதலீட்டு, வர்த்தக, நடமாட்டம் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் செ ஹான் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டின் தொடக்க விழாவிற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஆரம்பகட்ட ஆய்வு இந்த ரயில் திட்டத்தின் திசை குறித்து மாநில அரசுக்கு தெளிவான புரிதலை வழங்கியுள்ளதாகவும், தற்போது திட்டத்தை நீடித்த முறையில் செயல்படுத்துவதற்கான நிதி மற்றும் வணிக மாதிரிகளை உருவாக்குவதே மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.
மாநில அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக அதன் சாத்தியக்கூறுகள் மற்றும் பொருத்தமான நிதி மாதிரிகளை முழுமையாக உறுதி செய்ய உழைத்து வருகிறது.
இந்த கித்தா சிலாங்கூர் ரயில் பாதை திட்டம், சுமார் 200 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கொண்ட ஒரு ரயில் வலையமைப்பாகும்.
இது சிலாங்கூரின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை நெகிரி செம்பிலானில் உள்ள லாபுவுடன் இணைப்பதுடன், வெஸ்ட்போர்ட் மற்றும் கிள்ளான் போன்ற முக்கிய இடங்களுக்கும் போக்குவரத்து இணைப்புகளை வழங்கும்.
பொதுமக்களையும் முக்கிய தொழில்துறை, தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து மையங்களையும் இணைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும் இத்திட்டம் இலக்கு வைத்துள்ளது.
மேலும், இந்த பொதுப் போக்குவரத்து இணைப்பின் மேம்பாடு, சிலாங்கூர் முழுவதும் சமநிலையான வளர்ச்சி மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மாநில அரசின் 'இரண்டாவது சிலாங்கூர் திட்டம்' (RS-2) என்ற பரந்த வளர்ச்சித் திட்டத்திற்கு இணங்க அமைந்துள்ளது.



