கோலாலம்பூர், ஆகஸ்ட் 27: கடந்தாண்டு 1 கோடியே 47 லட்சம் ரிங்கிட் ரொக்கம், பல்வேறு வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ஐந்து தங்கக் கட்டிகள் உள்ளிட்ட சொத்துக்களை அறிவிக்கத் தவறிய குற்றச்சாட்டுக்காக , முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
பெரா நாடாளுமன்ற உறுப்பினரான 66 வயது இஸ்மாயில் சப்ரி, தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
குற்றச்சாட்டின் படி, 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் பிரிவு 36(1)(a)-இன் கீழ், ஜனவரி 7, 2025 தேதியிட்ட நோட்டீஸின் விதிகளுக்கு இணங்காமல், வேண்டுமென்றே எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தை வழங்கியதாக இஸ்மாயில் சப்ரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் ஜனவரி 10, 2025 அன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரி ஒருவரால் இஸ்மாயில் சப்ரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதில் குறிப்பிடப்பட்ட சொத்துக்களை அவர் அறிவிக்கவில்லை என்று கூறப்பட்டது.
RM14,772,150 ரொக்கம், வெளிநாட்டு நாணயங்களான SGD 6,132,350, USD 1,461,400, CHF 3,000,000, EUR 12,164,150, JPY 363,000,000, GBP 50,250, NZD 44,600, AED 34,750,000 மற்றும் AUD 352,850 மற்றும் தங்கம், வெள்ளிக் கட்டிகளான தலா 1 கிலோகிராம் எடையுள்ள 5 சூயிஸ் ஃபைன் தங்கக் கட்டிகள் ( Suisse Fine Gold), 100 கிராம் எடையுள்ள சூயிஸ் ஃபைன் சில்வர் வெள்ளிக் கட்டி மற்றும் 5 கிராம் எடையுள்ள ஒரு 999 ஃபைன் கோல்ட் தங்க நாணயம் ஆகியவை அறிவிக்கப்படாத சொத்துக்கள் ஆகும்.
இந்தக் குற்றச்சாட்டு 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் பிரிவு 36(2)-இன் கீழ் வாசிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் RM100,000-க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படலாம்.
இந்த வழக்கை துணை அரசு வழக்கறிஞர் ஃபரா எஸ்லின் யுசோப் கான் கையாண்டார்.
இஸ்மாயில் சப்ரியை வழக்கறிஞர் டத்தோ ஆமிர் ஹம்சா அர்ஷாத் பிரதிநிதித்தார்.
இஸ்மாயில் சப்ரி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதியே நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக அவர் தேசிய இருதய கழகத்தில் (IJN) அனுமதிக்கப்பட்டதால், நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.



