கூச்சிங், 25 ஆகஸ்ட்: கூச்சிங் அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்கும் பாதையில் உள்ள மேற்கூரையின் ஒரு பகுதி, இன்று மாலை பெய்த பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாகச் சேதமடைந்தது.
பாதிக்கப்பட்ட பகுதி உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மலேசியா ஏர்போர்ட்ஸ் (Malaysia Airports) நிறுவனம் தெரிவித்ததது.
மேலும், விமான நிலையப் பணிக்குழுவினர் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு, தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
"பயணிகள், விமான நிலையப் பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களின் முக்கிய முன்னுரிமையாகும்," என்று மலேசியா ஏர்போர்ட்ஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அந்த அறிக்கையின்படி, விமான நிலையத்தின் செயல்பாடுகள் வழக்கம் போல் தடையின்றி நடைபெற்று வருகின்றன.
இருப்பினும், பயணிகள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் முனையத்திற்குள் நுழைவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.



