'ஷா ஆலம், ஆகஸ்ட் 25 - மோசடி கும்பல்கள் (Scammers) தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடியில் இறங்கியுள்ளனர்.
ஒருவரை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காகக் குடும்ப உறுப்பினர்கள் அல்லது அவர்களுக்குத் தெரிந்த நபர்களின் குரல்களைப் போலிக்குரலாக (Voice cloning) மாற்றிப் பயன்படுத்தி வருகின்றனர்.
குரல் குளோனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய இத்தகைய மோசடி வழக்குகள் ஏற்கனவே பதிவாகியுள்ளன என சிலாங்கூர் மாநில வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJK) துணைத் தலைவர், அசிஸ்டண்ட் கமிஷனர் இர்வான் அப்துல் கரீம் தெரிவித்தார்.
"மோசடி செய்பவர்கள் தற்போது வாய்ஸ் குளோனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அவர்கள் உடன்பிறந்தவர்கள், பெற்றோர், நண்பர்கள் அல்லது நெருங்கிய நபர்களின் குரல்களைப் பயன்படுத்தி, அவர்களைப் போல நடித்து உதவிக் கோரலாம்," என்று மீடியா சிலாங்கூர் தயாரிப்பிலான 'பிசாரா செமாசா' (Bicara Semasa) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
முக அமைப்பை மாற்றியமைக்க 'டீப்ஃபேக்' (Deepfake) தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் மோசடி செய்பவர்கள் தங்களைப் போலீஸ் அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN) அல்லது பிற அரசாங்க அமைப்புகளின் அதிகாரிகளைப் போலக் காட்டிக் கொள்ள முடிகிறது.
இந்த மோசடி கும்பல்களால் ஒருவரின் பேசும் விதம் மற்றும் மொழி நடையைப் பின்பற்ற முடிகிறது.
அதோடு, ஏமாற்றுவதற்கான குறுஞ்செய்திகள் (Phishing messages) மற்றும் மோசடி உரையாடல்களை (Scripts) உருவாக்கவும் அவர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றனர்.
'காலர் ஐடி ஸ்பூஃபிங்' (Caller ID spoofing) எனும் தொழில்நுட்பத்தின் மூலம், அழைப்பவரின் தொலைபேசி எண்ணை மாற்றி, அது போலிசின் அதிகாரப்பூர்வ எண் போலத் தோன்றுமாறு செய்ய முடியும் என்றும் இர்வான் கூறினார்.
எனவே, பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான அழைப்புகளை உடனடியாகத் துண்டித்துவிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ எண்கள் மூலம் நேரடியாகத் தொடர்புகொண்டு உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விசாரணை நோக்கங்களுக்காகப் பொதுமக்களின் பணத்தைத் தனிநபர் கணக்குகளுக்கோ அல்லது மூன்றாம் தரப்பு கணக்குகளுக்கோ மாற்றுமாறு போலிஸ் ஒருபோதும் கேட்காது என்று அவர் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.





