ஷா ஆலாம் - சிலாங்கூர் குவாங் (Kuang) சந்திப்பு மேம்பாட்டுத் திட்டம் தடையின்றி தொடர்வதற்கு ஏதுவாக, சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்தினர் தங்களின் வழிபாட்டுத் தலக் கட்டமைப்பை, நிர்ணயிக்கப்பட்ட முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தல (RIBI) இடத்திற்கு மாற்ற ஒப்புக்கொண்டனர்.
கோயில் தரப்பினர், சைம் டார்பி (Sime Darby) நிறுவனம், குவாங் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ரஃபிக் முகமட் அப்துல்லா, மாநில ஆட்சிக் குழு அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக சிலாங்கூர் மாநில பௌத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோயிச சிறப்புக் குழுவின் (LIMAS) இணைத் தலைவர் பப்பாராயுடு வீரமான் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலத்தை மாற்றுவதற்காக 0.72 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு புதிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தளம், வேலி, தற்காலிக நுழைவுப்பாதை மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட இதர ஆதரவு வசதிகளும் அங்கு செய்து தரப்படவுள்ளன.
"இந்த விவகாரம் வெறும் சாலை விரிவாக்கத் தேவை சார்ந்தது மட்டுமல்ல, அந்தப் பகுதியில் உள்ள சில வழிபாட்டுத் தலங்களின் நலன்களோடும் தொடர்புடையது. எனவே, இதற்கான தீர்வுக்கு முதிர்ச்சியான, திறந்த மனதுடனான அணுகுமுறை மற்றும் அனைத்து தரப்பினரின் நலன்களையும் கருத்தில் கொள்வது அவசியமாக இருந்தது" என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தச் சம்மதம் வெறும் வாய்மொழியாக மட்டும் இல்லாமல், கோயில் சங்கங்களின் பிரதிநிதிகள் அந்த இடத்தை காலி செய்வது மற்றும் புதிய இடத்திற்கு கட்டமைப்பை மாற்றுவது தொடர்பான உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதில் ஒரு கோயில் சங்கத்தைப் பொறுத்தமட்டில், கடந்த மார்ச் 5-ஆம் தேதியிட்ட உறுதிமொழிப் பத்திரத்தில், மதிப்புள்ள பொருட்களை மாற்றுவது, தற்போதைய கட்டமைப்பை இடிப்பது மற்றும் இடத்தை தூய்மைப்படுத்துவது போன்ற பணிகள் விவரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
"அனைத்து தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து, ஒருவருக்கொருவர் கருத்துக்களைக் கேட்டு, பொதுவான நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தயாராக இருக்கும்போது, எவ்வளவு சிக்கலான பிரச்சினையையும் சுமுகமாகவும் இணக்கமாகவும் தீர்க்க முடியும் என்பதற்கு இந்தத் தீர்வு ஒரு சான்றாகும்.
சாலை விரிவாக்கம் போன்ற மேம்பாட்டுத் தேவைகள் ஏற்படும் போது, அந்த மேம்பாட்டுப் பணிகள் தொடர வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.
அதே வேளையில், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தின் நலன்களும் தொடர்ந்து மதிக்கப்பட வேண்டும்" என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.



