புது டில்லி: விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், கோதுமை மற்றும் கோதுமைப் பொருட்களின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த நான்கு ஆண்டுகால தடையை இந்தியா நீக்கியுள்ளதாக, வெளிநாட்டு வர்த்தக தலைமையகம் அறிவித்துள்ளது.
அந்தத் தடை மே 2022-இல் விதிக்கப்பட்டது. தற்போதைய புதிய உத்தரவின்படி, கோதுமை ஏற்றுமதி கொள்கை 'தடைசெய்யப்பட்டது' என்ற நிலையில் இருந்து 'கட்டுப்பாடற்றது' (free) என உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வெளிவர்த்தக தலைமையகத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் போதுமான அளவு கோதுமை இருப்பு உள்ளதாகவும், வரும் ஆண்டுகளில் கோதுமை உற்பத்தியை அதிகரிக்க விவசாய சமூகத்தை ஊக்குவிப்பதற்கான ஒரு படியாக இது இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளதால், இந்த தடை நீக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் 2025-26 பயிர் ஆண்டில் (ஜூலை 2025-ஜூன் 2026) நாடு சுமார் 120.65 மில்லியன் டன் கோதுமையை உற்பத்தி செய்துள்ளது.
இது முந்தைய பயிர் ஆண்டை விட சுமார் 2.3 விழுக்காடு அதிகமாகும்.
தற்போது உள்நாட்டில் கோதுமை விலை குறைந்துள்ளதால், கோதுமை மற்றும் கோதுமைப் பொருட்களின் ஏற்றுமதியை அனுமதிப்பது உள்நாட்டு விலையை உயர்த்தும் என்றும், இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதோடு வரும் பருவத்தில் நல்ல முறையில் பயிர் செய்ய அவர்களை ஊக்குவிக்கும் என்றும் அந்நாட்டின் உணவு,பொது விநியோகத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறியுள்ளார்.



