கோலாலம்பூர், ஆகஸ்ட் 24 — ஆகஸ்ட் 30-ஆம் தேதி காஜாங் அரங்கில் நடைபெறவுள்ள சிலாங்கூர் மாநில அளவிலான சுதந்திர தின முந்தைய நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, காஜாங்கில் உள்ள ஐந்து முக்கிய சாலைகள் புதன்கிழமை முதல் கட்டம் கட்டமாக மூடப்படும்.
இந்த நிகழ்ச்சியின் போது சுமூகமான போக்குவரத்தையும் பொதுப் பாதுகாப்பையும் உறுதி செய்ய, இந்த சாலை மூடப்படுவதாக காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசுப் தெரிவித்தார்.
ஜாலான் மஹ்காமா (Jalan Mahkamah) புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்படும் என்றும், மற்ற நான்கு சாலைகளான ஜாலான் செம்பாகா புத்தே, ஜாலான் செம்பாகா குனிங், ஜாலான் ஸ்டேடியம் மற்றும் ஜாலான் செராஸ் (Jalan Cempaka Putih, Jalan Cempaka Kuning, Jalan Stadium , Jalan Cheras ) ஆகியவை கட்டம் கட்டமாக மூடப்படும் என்றும் அவர் கூறினார்.
ஒத்திகைகளுக்கான கட்டம் கட்டமான சாலை மூடல்கள் ஆகஸ்ட் 28 அன்று காலை 8.30 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், இரவு 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும், அதே போல் ஆகஸ்ட் 29 அன்று இரவு 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் அமலில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
கொண்டாட்டத்தின் முக்கிய நாளான ஆகஸ்ட் 30 அன்று, காலை 8.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை சம்பந்தப்பட்ட அனைத்து சாலைகளும் முழுமையாக மூடப்படும் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பொதுமக்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறும், விழா நடக்கும் இடத்தை சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் நஸ்ரோன் அறிவுறுத்தினார்.
வருகையாளர்களின் நடமாட்டத்தை எளிதாக்க, விழா நடக்கும் இடத்தை சுற்றிலும் குறிப்பிட்ட வாகன நிறுத்துமிடங்களை ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
வருகையாளர்கள் சுங்கை ஜெர்னிஹ் எம்ஆர்டி, புக்கிட் டுகுங் எம்ஆர்டி, ஜாலான் புக்கிட் எம்ஆர்டி, ஜாலான் ரெக்கோ எல்ஆர்டி மற்றும் காஜாங் 2 எல்ஆர்டி ( Sungai Jernih MRT, Bukit Dukung MRT, Jalan Bukit MRT, Jalan Reko LRT, Kajang 2 LRT) ஆகிய முக்கிய இரயில் நிலையங்களில் இருந்து வழங்கப்படும் அரசு பேருந்து சேவைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கிடையில், ஏதேனும் அவசரநிலைகளுக்கு உடனடியாகச் செயல்படும் வகையில் காஜாங் மருத்துவமனை, மலேசியா செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் , காஜாங் பிளாசா மருத்துவ மையம் மற்றும் மலேசிய ஆயுதப்படை ஆகியவற்றின் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் முக்கிய இடங்களில் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
போக்குவரத்து தொடர்பான விசாரணைகள் அல்லது புகார்கள் உள்ளவர்கள், காஜாங் மாவட்ட காவல்துறை தலைமையகக் கட்டுப்பாட்டு மையத்தை 03-8911 4222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



