ஷா ஆலாம், ஆகஸ்ட் 24 - 2026 சுக்மா போட்டியின் ஓட்டுமொத்த வெற்றியாளராக உருவெடுத்ததை அடுத்து, சிலாங்கூர் மாநிலத்திற்கு செப்டம்பர் முதலாம் தேதி சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி அந்த அறிவிப்பைச் செய்தார்.
ஷா ஆலாம் செக்க்ஷன் 14 , அனேகா வால்க்கில் நடைபெற்று வரும் சுக்மா நிறைவு விழாவின் போது உரையாற்றுகையில் அவர் அந்த அறிவிப்பைச் செய்தார்.
“ சுக்மா போட்டியில் சிலாங்கூர் அபார ஆற்றலை வெளிப்படுத்தியது.
விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பையும், இந்த விளையாட்டுப் போட்டி சுமூகமாக நடைபெற உதவியாக இருந்த சுமார் 10,000 தன்னார்வலர்களின் தன்னலம் கருதாதச் செயலையும் பாராட்டி, அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் முதலாம் தேதி , சிலாங்கூரில் சிறப்பு விடுமுறை அனுசரிக்கப்படுமெனப் பெருமையுடன் அறிவிக்கிறேன் “ என அமிரூடின் ஷாரி தமதுரையில் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் அணி , 101 தங்கம், 73 வெள்ளி, 71 வெண்கலப் பதக்கங்கள் ஆகியவற்றுடன் மொத்தம் 245 பதக்கங்களைக் குவித்தது .
தொடக்கப் பதக்க இலக்கான 80 தங்கப் பதக்க எண்ணிக்கையையும் தாண்டி, சிலாங்கூர் அணி பிரமிக்கத்தகும் வெற்றியைப் பதிவுச் செய்தது.
51 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்த கூட்டரசுப் பிரதேசத்தையும், 43 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்த திரெங்கானுவையும் காட்டிலும், சிலாங்கூர், தங்கப் பதக்க எண்ணிக்கையில் அதிக வித்தியாசத்தில் கம்பீரமாக முதலிடத்தில் வீற்றிருக்கிறது.






