செலாயாங், ஆகஸ்ட் 24 - செலாயாங் மொத்த வியாபாரச் சந்தையைச் சுற்றி வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் அந்நிய நாட்டவர்களின் பிரச்சனையைக் களைய, செலாயாங் நகராண்மைக் கழகம் சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ளது.
அப்பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை நடவடிக்கைகள் மேற்கொள்ள சாத்தியமாக இருக்கும் வழிகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுக்கும் முயற்சிகளை அப்பணிக்குழு மேற்கொள்ளும்.
அப்பணிக்குழுவிற்கு செலாயாங் நகராண்மைக் கழகத்தின் துணைத் தலைவர் அசார் சம்சூரி தலைமையேற்றிருப்பதாக, அந்நகராண்மையின் தலைவர் ஷாமான் ஜாலாலுடின் தெரிவித்தார்.

" இப்பகுதியில் சட்டவிரோதமாக அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்வது புதியதொரு விஷயமல்ல. முக்கிய பிரச்சனை என்னவென்றால் அவர்கள் மியன்மார் நாட்டவர்கள். பிற அந்நிய நாட்டவர்களைக் கைது செய்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பது போல் இவர்களை அனுப்பி வைக்க இயலாது " என ஷாமான் கூறினார்.
அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யும் பகுதிகளை மூடுவது அல்லது மாற்றியமைப்பது போன்ற முயற்சிகளை செலாயாங் நகராண்மைக் கழகம் எடுக்கும்.
அந்த முயற்சிகள், செலாயாங் மொத்த வியாபாரச் சந்தை மீதான பொது மக்களின் பார்வையை மாற்றுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று இங்கு நடைபெற்ற செலாயாங் நகராண்மைக் கழக கூட்டத்திற்குத் தலையேற்றப் பின்னர் அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.



