ஷா ஆலாம், ஆகஸ்ட் 24 : இன்று அதிகாலை செந்தூல், கம்புங் காசிப்பிள்ளை , ஜாலான் இஸ்மாயில் கானி பகுதியில் உள்ள மூன்று குடிசை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒருவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.
அதிகாலை 1.15 மணியளவில் NG999 அவசர அழைப்பு எண் மூலம் இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
செந்தூல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த குழுவினருக்கு உதவியாக, ஹாங் துவா மற்றும் தென் கோம்பாக் நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
"தீ அணைக்கும் முயற்சியில் 3 தீயணைப்பு வாகனங்கள் (FRT), ஒரு தண்ணீர் கொல்கலன்(Water Tanker) மற்றும் அவசர மருத்துவ சேவைப் பிரிவின் வாகனம் ஆகியவை பயன்படுத்தப்பட்டன; மொத்தம் 28 பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர்.
"தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தை அடைந்தபோது சுமார் 4,872 சதுர அடி பரப்பளவைக் கொண்ட, மூன்று நிரந்தர குடிசை வீடுகள் தீப்பற்றி எரிவது கண்டறியப்பட்டது," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட வீடுகள் 100 சதவீதம் முழுமையாக சேதமடைந்ததாக அவர் கூறினார்.
மேலும், இச்சம்பவத்தில் 26 வயதுடைய ஒரு நபருக்கு உடலிலும் காலிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன.
அவர் மேல் சிகிச்சைக்காகக் கோலாலம்பூர் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்டார்" என்று அவர் கூறினார்.
தீ முழுமையாக அணைக்கப்பட்ட நிலையில் , விபத்துக்கான காரணம் குறித்து தடயவியல் பிரிவினர் இன்னும் விசாரணை நடத்தி வருவதாகவும் அகமட் முக்லிஸ் தெரிவித்தார்.




