சிலாங்கூர் குடிநுழைவுத் துறையின் கூட்டு நடவடிக்கை: 140 வெளிநாட்டினர் கைது

23 ஆகஸ்ட் 2026, 9:24 AM
சிலாங்கூர்  குடிநுழைவுத் துறையின் கூட்டு நடவடிக்கை: 140 வெளிநாட்டினர் கைது

ஷா ஆலம், ஆகஸ்ட் 23 : நேற்று அதிகாலை பெட்டாலிங் மற்றும் கிள்ளான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலாங்கூர் மலேசிய குடிநுழைவுத் துறை மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், வங்காளதேசம், மியன்மார், இந்தோனேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 140 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

சுபாங் ஜெயா மற்றும் கிள்ளான் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட உளவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில், நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனையில் மொத்தம் 252 நபர்கள் பரிசோதிக்கப்பட்டதாக சிலாங்கூர் குடிநுழைவுத் துறை தெரிவித்தது.

குடிநுழைவுச் சட்டம் 1959/63-ன் பிரிவு 6(1)(c) மற்றும் பிரிவு 15(1)(c) ஆகியவற்றுக்கு எதிரான மீறல் அடிப்படையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக குடிநுழைவுத் துறை அதன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

பிரிவு 6(1)(c) என்பது முறையான அனுமதி அல்லது நுழைவு பெர்மிட் (Pass/Permit) இன்றி மலேசியாவில் தங்கியிருக்கும் குற்றத்தையும், பிரிவு 15(1)(c) என்பது அனுமதிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பிறகும் நாட்டில் தங்கியிருக்கும் குற்றத்தையும் குறிக்கிறது.

"கைது செய்யப்பட்ட அனைவரும் ஆவணப்படுத்தும் நடவடிக்கைக்காகவும், நடைமுறையிலுள்ள சட்ட விதிகளின்படி அடுத்தகட்ட விசாரணைக்காகவும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்" என்று சிலாங்கூர் மாநில குடிநுழைவுத் துறையின் அமலாக்க நிறுவனம் விளக்கியது.

இந்த கூட்டு நடவடிக்கையில் சிலாங்கூர் குடிநுழைவுத் துறை , தேசிய பதிவுத்துறை , தேசிய போதைப்பொருள் ஒழிப்பு அமைப்பு(AADK) மற்றும் மலேசிய பொது பாதுகாப்புப் படை (APM) ஆகியவற்றைச் சேர்ந்த 164 அதிகாரிகள் ஈடுபட்டனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.