ஷா ஆலாம், ஆகஸ்ட் 22 - செதாப்பாக் , ஜாலான் லங்காவியில் வீட்டில் தூக்கிலிட்டுக் கொண்ட 14 வயது இடைநிலைப் பள்ளி மாணவியின் மரணம் தொடர்பில், போலீசார் இதுவரை 92 பேரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 19 -ஆம் தேதி, மாலை மணி 7.49-க்கு சம்பந்தப்பட்ட மாணவியின் தாயார் செய்திருந்த புதிய போலீஸ் புகாரை அடுத்து, வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அந்த விசாரணையை மேற்கொண்டது.
அம்மாணவியின் இறப்பு தொடர்பில் போலீசின் அண்மைய விசாரணை குறித்த தகவலை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மர்சூஸ் பகிர்ந்துக் கொண்டார்.
தற்போது அந்த சம்பவம், குற்றவியல் சட்டத்தின் செக்க்ஷன் 507B பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது. அச்சட்டம் மூன்றாண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்கிறது.
அச்சம்பவம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், டத்தோ ஃபாடில் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.
அறையில் தனது மகள் தூக்கிலிட்டுக் கொண்டதைக் கண்டறிந்த பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் ஆகஸ்ட் 18-ஆம் தேதி அதிகாலை மணி 1.59 வாக்கில் போலிசுக்கு அவசர அழைப்பைச் செய்திருந்தார்.
அந்த மாணவி உடனடியாக கோலாலம்பூர் மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு கொண்டுச் செல்லப்பட்டார். எனினும் அங்கு பணிபுரியும் மருத்துவ அதிகாரி அம்மாணவி அதிகாலை மணி 2. 25-க்கு இறந்து விட்டதாக உறுதிப்படுத்தினார்.
பிரேதப் பரிசோதனையில், தூக்கில் தொங்கியதால் கழுத்தில் ஏற்பட்ட அழுத்தத்தால் அம்மாணவி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தொடக்கத்தில், திடீர் மரணம் என்ற ரீதியில் செதாப்பாக் நிலைய போலீஸ் தலைவர் போலீஸ் அறிக்கையைத் திறந்தார்.
இவ்வேளையில், பொது மக்கள் அம்மாணவியின் மரணம் தொடர்பில் எந்தவோர் ஆருடங்களையும் வெளியிட வேண்டாமென ஃபாடில் கேட்டுக் கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்தவர்கள் , விசாரணை அதிகாரி ஏஸ்பி பல்டவ் சிங்-கை 03-92899222 என்ற எண்ணில் அல்லது 012-4806062 என்ற எண்ணில் அழைக்கலாம். அல்லது கோலாலம்பூர் ஹொட்லைன் எண்ணில் 03-21159999 அழைத்தும் தகவல் அளிக்கலாம். அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்றும் தகவல் கொடுக்கலாம்.



