காஜாங், ஆகஸ்ட் 22 : விபத்தை ஏற்படுத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயன்ற ஓட்டுநரை நிறுத்த முயன்றபோது, அங்கிருந்த கம்பம் சாய்ந்து 47 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இத்துயரச் சம்பவம் செராஸ், பண்டார் மஹ்கோத்தா உணவகத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) நிகழ்ந்தது.
35 வயதுடைய ஆண் ஓட்டுநர் ஒருவர் தவறுதலாகத் தனது காரின் ஆக்ஸிலரேட்டர் (accelerator)- வேக முடுக்கியை மிதித்ததால், கார் நேராக உணவகத்திற்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது.
"ஓட்டுநர் அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றபோது, அந்தப் பெண் காரை வழிமறித்து நிறுத்த ஓடினார்.
ஆனால், அந்த வாகனம் அருகில் இருந்த கம்பத்தின் மீது மோதியதில், அது நேரடியாக அவர் மீது சரிந்து விழுந்தது" என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசுப் இன்று தெரிவித்தார்.
தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவ உதவியாளர்கள் உறுதிப்படுத்தினர்.
தற்போது அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மரணத்தை விளைவிக்கும் வகையில் அலட்சியமாக அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் இந்த விபத்து விசாரிக்கப்படுகிறது.



