சில்க் நெடுஞ்சாலையில் லாரி தீப்பற்றி எரிவாயு கலன்கள் வெடித்தன

22 ஆகஸ்ட் 2026, 4:44 AM
சில்க் நெடுஞ்சாலையில்  லாரி தீப்பற்றி எரிவாயு கலன்கள் வெடித்தன

காஜாங், ஆகஸ்ட் 22 : நேற்று சில்க் (SILK) நெடுஞ்சாலையின் 0.1 கிலோமீட்டரில் , சமையல் எரிவாயு கலன்களை ஏற்றியிருந்த லாரி தீப்பற்றி எரிந்து, கலன்கள் வெடித்து விபத்தில், அதன் ஓட்டுநர் காயமின்றித் தப்பினார்; லாரியின் உதவியாளர் தீக்காயங்களுக்கு ஆளானார்.

இந்த விபத்து நேற்று மாலை 4.40 மணியளவில், சம்பந்தப்பட்ட லாரி செமினி (Semenyih) நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்ததாக, மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசுப் தெரிவித்தார்.

"சில்க் நெடுஞ்சாலையின் 0.1 கி.மீ பகுதியை அடைந்தபோது, தாங்கள் ஏற்றி வந்த எரிவாயு கலன்கள் தீப்பற்றி எரிவதை 55 வயதான அந்த லாரி ஓட்டுநர் கவனித்துள்ளார். உடனடியாக அவர் லாரியை சாலையோரப் பாதையில் நிறுத்திவிட்டு, வாகனத்தில் இருந்து பத்திரமாக தப்பியோடினார்.

முற்றிலும் தீக்கிரையான லாரி

இருப்பினும், லாரியில் இருந்த கலன்கள் தொடர்ந்து எரிந்ததால், சில எரிவாயு கலன்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி சாலையின் மறுபுறம் வரை தூக்கி வீசப்பட்டன," என்று நாஸ்ரோன் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

இந்த விபத்து தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

இது குறித்து சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் மாநில நடவடிக்கை பிரிவின் உதவி இயக்குனர் அஷ்ருல் ரிசால் அஷ்பார் தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) கலன்களை ஏற்றிச் சென்ற அந்த லாரி, 98 விழுக்காடு முற்றிலும் எரிந்து சாம்பலாகியதாகத் தெரிவித்தார்.

தகவலறிந்து பாங்கி தீயணைப்பு , மீட்பு நிலையத்திலிருந்து ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் அவசர மருத்துவ மீட்பு சேவை (EMRS) பிரிவுடன் எட்டு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

"LPG கலன்களை ஏற்றிச் சென்ற மூன்று டன் எடையுள்ள லாரி தீப்பற்றி எரிந்ததாகவும், தீ மேலும் பரவாமல் தடுக்க உடனடியாக தீயணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இத்தீ விபத்துக்கான காரணம் மற்றும் அதனால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு குறித்து இன்னும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.