முதியோர்கள் சமூக ஆதரவைப் பெற ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் 'PAWE'மையங்கள் விரிவுபடுத்தப்படும்

22 ஆகஸ்ட் 2026, 3:18 AM
முதியோர்கள் சமூக ஆதரவைப் பெற ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் 'PAWE'மையங்கள் விரிவுபடுத்தப்படும்
முதியோர்கள் சமூக ஆதரவைப் பெற ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் 'PAWE'மையங்கள் விரிவுபடுத்தப்படும்

ஷா ஆலாம், ஆகஸ்ட் 22 : சிலாங்கூரில் உள்ள முதியோர்கள் சமூக நடவடிக்கைகள் மற்றும் சமூக ஆதரவுத் திட்டங்களை எளிதாகப் பெறுவதை உறுதி செய்வதற்காக, முதியோர் செயல்பாட்டு மையங்கள் (PAWE) மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளன.

முதியோர்களுக்கான இந்த மையங்களை 'நல்வாழ்வு- தற்காலிகப் பராமரிப்பு மையங்கள்' (Respite Care Wellness Hub) என்ற புதிய கருத்தாக்கத்தின் கீழ் விரிவுபடுத்த மாநில அரசு விரும்புவதாக சமூக நலத்துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.

சமூக நலத்துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி படம் - மீடியா சிலாங்கூர்

மேலும், ஊராட்சி தரப்புகள் தங்களின் நிர்வாகப் பகுதிகளிலும் இத்தகைய மையங்களை உருவாக்குவதை ஊக்குவிப்பதாக அவர் கூறினார்.

"இந்த அணுகுமுறை ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. எடுத்துக்காட்டாக, செலாயாங் நகராண்மைக் கழகத்தால் இது தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது," என்று இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தில் (RS-2) முதியோர் நலன் குறித்து மீடியா சிலாங்கூருக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ அறிக்கையில் அன்ஃபால் கூறினார்.

சமூக நலத்துறையின் கீழ் உள்ள 'PAWE' மையங்கள் தற்போது மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஊராட்சி மன்றங்கள் நிலையிலான இந்த மையங்கள் இன்னும் முன்னோடி கட்டத்திலேயே உள்ளன என்றும், எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள மொத்த மையங்களின் எண்ணிக்கையை இப்போது துல்லியமாகத் தீர்மானிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, சிலாங்கூர் முழுவதும் 21 'PAWE' மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், அவை 5,817 முதியோர்களுக்குச் சேவையாற்றி வருவதாகவும் அன்ஃபால் தெரிவித்தார்.

இந்த மையங்கள் முதியோர்களின் சுறுசுறுப்பான முதுமை மற்றும் நல்வாழ்வை ஊக்குவிப்பதற்காக பல்வேறு ஆரோக்கியம், சமூகம், பொழுதுபோக்கு, வாழ்நாள் முழுதுமான கற்றல் மற்றும் தன்னார்வச் சேவைகளை வழங்குகின்றன என்றும் அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.