
ஷா ஆலாம், ஆகஸ்ட் 21 - சிலாங்கூர் மகளிர் ஃபுட்சல் அணி 2026 சுக்மா போட்டியில் கூட்டரசு பிரதேச அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
ஷா ஆலம் இளைஞர், விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியின் வெற்றி, சிலாங்கூர் மகளிர் அணிக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும்.

கடந்த வியாழக்கிழமை சிலாங்கூர் ஆடவர் ஃபுட்சல் அணியும் தங்கம் வென்றிருந்த நிலையில், தற்போது மகளிர் அணியும் வெற்றி பெற்றதன் மூலம் சுக்மா ஃபுட்சல் பிரிவின் இரு தங்கப் பதக்கங்களையும் சிலாங்கூர் மாநிலமே முழுமையாகக் கைப்பற்றி இரட்டைச் சாதனையைப் படைத்தது.

சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் இந்த வெற்றியைப் பெற்றது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிப்பதாக சிலாங்கூர் மகளிர் அணியின் பயிற்சியாளர் முகமட் ஃபைரூஸ் முகமட் நூர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் தங்கப் பதக்கத்தை சிலாங்கூர் மாநிலத்திற்கு அர்ப்பணிப்பதாகவும் அவர் கூறினார். இந்த அபார வெற்றி, தற்போது நடைபெற்று வரும் பிற விளையாட்டுப் போட்டிகளிலும் சிலாங்கூர் மாநிலக் குழுவினர் கூடுதல் பதக்கங்களை வெல்ல ஒரு பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.





