சென்னை, ஆகஸ்ட் 21 - 7 தலைமுறைகளுக்கும் மேல் சினிமாத் துறையில் கோலோச்சி தான் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை செளகார் ஜானகி காலமானார்.
வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 21) அவர் காலமானார்.
அவருக்கு வயது 94.

செளகார் ஜானகி, தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு மொழியில் அவர் நடித்த செளகார் என்ற படத்தின் மூலம் ஜானகி என்ற தனது இயற்பெயருக்கு முன்பாக செளகார் என்ற அடைமொழியை அவர் இணைத்துக் கொண்டார்.
கலை உலகிற்கு இவர் ஆற்றிய வாழ்நாள் சேவையைப் பாராட்டி, ஒன்றிய அரசு 2022-ஆம் ஆண்டு இவருக்கு நாட்டின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ' விருதை வழங்கி கௌரவித்தது.

மறைந்த நடிகை சௌகார் ஜானகிக்கு 3 மகன்கள் உள்ளனர்.
1952ல் ‛வளையாபதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சவுகார் ஜானகி.
பணம் படுத்தும் பாடு, புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், எதிர் நீச்சல், இரு கோடுகள், உயர்ந்த மனிதன், காவிய தலைவி, ரங்க ராட்டினம், தில்லு முல்லு, வெற்றி விழா, ஹேராம் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

இப்பழம்பெரும் நடிகையின் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




