2 சிங்கப்பூரர்களைக் கடத்தி RM63,000 பிணைப் பணம் கோரிய அறுவர் : குற்றச்சாட்டை மறுத்தனர்

21 ஆகஸ்ட் 2026, 8:48 AM
2 சிங்கப்பூரர்களைக்  கடத்தி RM63,000 பிணைப் பணம்  கோரிய அறுவர் : குற்றச்சாட்டை மறுத்தனர்

பெட்டாலிங் ஜெயா: இம்மாதத் தொடக்கத்தில் ஜொகூர், ஸ்கூடாயில் சிங்கப்பூர் ஆடவரையும், ஒரு பெண்ணையும் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேர் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணைக் கோரினர் .

எம் பாலமுருகன் (46), கே சரவணன் (40), பி ஸ்ரீ தேவி (41), ஜி புகழேஸ்வரன் (38), எஸ் கோபிநாத் (38) மற்றும் எக்ஸ் எட்வின் நிக்கோலஸ் (41) ஆகிய அறுவரும் ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி நோர் அசியாதி ஜாபர் முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டனர்.

பின்னர், அவர்கள் அனைவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினர்.

ஆகஸ்ட் 8-ஆம் தேதி மதியம் 2 மணியளவில், ஸ்கூடாய், ஜாலான் ஓர்க்கிட்டில் உள்ள ஒரு தேவாலயத்தின் முன்பு, அல்-ஷமீர் அப்துல் நாசர் என்பவரை 20,000 சிங்கப்பூர் டாலர் (மலேசிய ரிங்கிட் 63,000) பிணைத்தொகைக்காகக் கடத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

1961-ஆம் ஆண்டு கடத்தல் சட்டத்தின் பிரிவு 3-இன் கீழ் இந்த இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்க வாய்ப்புள்ளது.

அதே வேளையில், சிங்கப்பூர் பெண் ஒருவரை ரகசியமாகவும் சட்டவிரோதமாகவும் அடைத்து வைக்கும் நோக்கத்துடன் கடத்தியதாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் இந்த ஆறு பேரும் மறுத்து விசாரணை கோரினர்.

ஆகஸ்ட் 11-ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் ஸ்கூடாய், ஜாலான் அமான் பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ஜொகூர் பாருவின் பல இடங்களில் இக்குற்றத்தைச் புரிந்ததாக மாஜிஸ்திரேட் ஏ. ஷார்மினி முன்னிலையில் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 365 -வது பிரிவின் கீழ் இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

மற்றொரு செஷன்ஸ் நீதிமன்றத்தில், ஆகஸ்ட் 8-ஆம் தேதி மதியம் 2 மணியளவில் ஜொகூர் பாரு உத்தாராவில் உள்ள ஒரு காரில் வைத்து, அல்-ஷமீரின் தங்கச் சங்கிலி மற்றும் ரோலக்ஸ் கடிகாரத்தைக் கொள்ளையடித்ததாக பாலமுருகன், சரவணன் மற்றும் கோபிநாத் ஆகிய மூவர் மீதும் தனித்தனியாகக் குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி மடிஹா சைனோல் முன்னிலையில் அவர்கள் இக்குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

குற்றவியல் சட்டம் பிரிவு 392-இன் கீழ் இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

இதற்கிடையில், அல்-ஷமீருக்குக் கத்தியால் காயம் ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட சரவணன் மற்றும் புகழேஸ்வரன் ஆகிய இருவருக்கும் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தலா 3,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.

நீதிமன்றம் ஸ்ரீ தேவி, எட்வின் மற்றும் புகழேஸ்வரன் ஆகிய மூவருக்கும் தலா 60,000 ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் விடுவிக்க அனுமதித்த வேளையில், பாலமுருகன், சரவணன் மற்றும் கோபிநாத் ஆகியோருக்கு தலா 69,000 ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் விடுவிக்க அனுமதி வழங்கியது.

மேலும், இவர்கள் ஒவ்வொரு மாதமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், தங்களது கடப்பிதழ்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் வழக்கறிஞர்களை நியமிப்பதற்காக நீதிமன்றம் செப்டம்பர் 23-ஆம் தேதியை நிர்ணயித்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.