பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 21 - ஆடவருக்கான ஸ்குவாஷ் குழு போட்டியில் சிலாங்கூர் அணி கணித்ததைப் போன்றே தங்கம் வென்றது. சிலாங்கூர் அணி கெடாவை 2-0 எனும் புள்ளி எண்ணிக்கையில் கெடாவை வீழ்த்தியது.
அவ்வாட்டம் இன்று பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் அஸ்தாகா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
முதல் ஆட்டத்தில் ஜி, கேசவன் கெடா விளையாட்டாளர் சிம் யீக் வெய்-யை 3-1 என்ற செட் எண்ணிக்கையில் வீழ்த்தினார்.
சிலாங்கூரின் இரண்டாவது ஒற்றையர் ஆட்டக்காரர் நிக்கிலேஸ்வர் மோகனசுந்தரம் ஆட்டத்தை ஆக்கிரமித்திருந்தார். அவர் கெடாவின் அகில் மிர்சா நாய்ம் கைரிலை 3-1 (9-11, 11-9, 11-2, 11-3) எனும் செட் எண்ணிக்கையில் தோற்கடித்தார்.

நிகிலேஸ்வருக்கு இந்த வெற்றி மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்தது. ஏனெனில் சுக்மா போட்டியில் அவர் பெற்ற முதல் தங்கப் பதக்கம் அதுவாகும். மேலும், இதற்கு முன்பு தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்ற அவரது ஏமாற்றத்திற்கு மருந்தாகவும் அமைந்தது.
"நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். முதலாவதாக, இந்த வெற்றியை எனது சக வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லையென்றால் இந்த தங்கப் பதக்க வெற்றி சாத்தியமாகியிருக்காது. நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு, ஆதரவளித்து, சகோதரர்களைப் போல ஒருவருக்காக ஒருவர் வெற்றி பெற்றோம். அதுதான் எங்களை ஒரு வலுவான அணியாக மாற்றியது," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், தனது தொழில் வாழ்க்கையில் எப்போதும் ஆதரவளித்து வரும் பயிற்சியாளர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
நிக்ஹிலேஸ்வர் கடந்த ஆண்டு பிலடெல்பியாவில் நடைபெற்ற அமெரிக்க இளையோர் பொது ஸ்குவாஷ் (US Junior Open) போட்டியில் வெற்றியாளர் பட்டம் வென்ற முதல் மலேசிய வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், சிலாங்கூர் அணியின் பயிற்சியாளர், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக கடுமையாகப் பயிற்சி பெற்ற பிறகு, இறுதியாகத் தங்கள் சொந்த மண்ணில் இந்த வெற்றியைப் பதிவு செய்தது மிகவும் இனிமையானது என்று விவரித்தார்.
"சிலாங்கூர் அணி கடைசியாக குழு பிரிவில் தங்கம் வென்றது 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன், இந்த முறை சொந்த மண்ணில் வென்றது மிகவும் சிறப்பு வாய்ந்தது.எங்கள் அணி முதன்மைத் தேர்வாக களம் இறங்கிய போதிலும், மூத்த அல்லது தொழில்முறை வீரர்களைக் களமிறக்கிய பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், 18 வயதிற்குட்பட்ட பெரும்பாலான இளையோர் வீரர்களைக் கொண்ட ஒரு தனித்துவமான அணியாக எங்கள் அணி இருந்தது.
சொல்லப்போனால், இந்த வீரர்களில் பாதி பேர் அடுத்த சுக்மா போட்டியிலும் சிலாங்கூர் அணிக்காக விளையாட இன்னும் தகுதி உடையவர்கள்," என்று அவர் கூறினார்.
முன்னதாக, இதே பிரிவில் பினாங்கு அணி 2-1 என்ற கணக்கில் கூட்டரசு பிரதேசத்தை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

இதற்கிடையில், பெண்களுக்கான குழு பிரிவில், நெகிரி செம்பிலானை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து மலாக்கா அணி தங்கப் பதக்கத்தை வென்றது; அதே நேரத்தில் கெடாவை வீழ்த்தி கூட்டரசு பிரதேசம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
சிலாங்கூர் ஸ்குவாஷ் அணி , இந்த சுக்மா போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் மற்றும் ஆண்களுக்கான குழு பிரிவின் மூலம் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றது.




