கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 - கூகுள் நிறுவனம் மலேசியாவில் தனது முதல் தரவு மையத்தை (data centre) அமைப்பதற்கு சிலாங்கூர் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு, சாதகமான அணுகுமுறையும் மற்றும் உகந்த சூழலுமே காரணமாகுமென அதன் ஆசிய பசிபிக் உலகளாவிய உட்கட்டமைப்புத் தலைவர் கென் சியா (Ken Siah) தெரிவித்தார்.
மாநிலத்தின் பரந்த நலன்களை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற முன்வந்த 'இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட்' (Invest Selangor Bhd) அமைப்பின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாக அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் அக்சியாட்டா கோபுரத்தில் உள்ள தலைமையகத்தில் 'மீடியா சிலாங்கூர்' நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் அவ்வாறு கூறினார்.

2024 மே 30-ஆம் தேதி முதன்முதலில் அறிவிக்கப்பட்ட, சிலாங்கூரின் எல்மினா வர்த்தகப் பூங்காவில் (Elmina Business Park) அமையவுள்ள மலேசியாவின் முதல் கூகுள் தரவு மையம் மற்றும் கூகுள் கிளவுட் வட்டாரத்தின் (Google Cloud region) மேம்பாடு உள்ளிட்ட கூகுளின் 200 கோடி அமெரிக்க டாலர் முதலீடு குறித்து சியா கருத்துரைத்தார்.
இந்தத் திட்டம் 2030-ஆம் ஆண்டிற்குள் 320 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான நேர்மறையான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தளத்தைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை மிகவும் கடுமையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது ; உள்ளூர் வளங்களுக்கோ அல்லது சமூகங்களுக்கோ பாதிப்பு ஏற்படுத்தாமல் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தக்கூடிய இடங்களை அடையாளம் காண்பதும் அதில் அடங்கும் என , ஆசிய-பசிபிக் வட்டாரத்தை உள்ளடக்கிய கூகுளின் தரவு மைய முதலீடு மற்றும் மேம்பாட்டுக் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் சியா கூறினார்.
கூகுள் நிறுவனம், மின்சாரக் கட்டமைப்புத் திறன் , நீர்நிலைகளின் ஆரோக்கியம் மற்றும் உள்ளூர் சூழலியல் போன்றவற்றை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் மதிப்பீடுகளை நடத்துகிறது.
தரவு மைய செயல்பாடுகளால் உள்ளூர் நீர் வளங்களுக்குக் கூடுதல் அழுத்தம் தராமல் ஆதரிக்க முடியுமா என்பதை உறுதிச் செய்ய, விரிவான தரவுகளின் அடிப்படையில் நீர் அபாய மதிப்பீடுகளையும் இந்தத் தொழில்நுட்ப நிறுவனம் மேற்கொள்கிறது.
"உள்ளூர் சமூகத்தின் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் தரவு மையத்தில் முதலீடு செய்வதில் எங்களுக்கு முழு திருப்தி ஏற்படுவதற்கு முன்பு, இந்த அனைத்து சோதனைகளையும் நாங்கள் முதலில் மேற்கொள்ள வேண்டும்," என்று சியா கூறினார்.
கூகுள் தனது நீண்ட கால செயல்பாடுகளை நிறுவத் திட்டமிடும் பகுதிகளில் உள்ள சமூகங்களின் தேவைகளைப் புரிந்து கொள்ள முயல்வதால், சமூகக் கருத்துகளும் அதன் மதிப்பீட்டின் முக்கியமான பகுதியாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.
"இந்தச் சமூகத்தின் தேவைகள் என்ன, அவர்களுக்கு ஆதரவளிக்க நாம் என்ன செய்ய முடியும், மற்றும் நாம் என்ன வகையான ஒத்துழைப்புகளைத் தொடரலாம் என்பது குறித்து பத்திரிகையாளர்கள் உட்பட சமூக உறுப்பினர்களுடன் மதிப்பீடுகளும் கலந்துரையாடல்களும் நடத்தப்படும்," என்று சியா கூறினார்.
கூகுளின் முதலீடுகள் நீண்ட கால அடிப்படையிலானவை என்பதால், சுற்றியுள்ள சமூகங்களை வெறும் வசதிகள் அமைந்துள்ள இடங்களாகப் பார்க்காமல், அவர்களைத் அண்டை வீட்டாராகக் கருதுவது மிகவும் முக்கியம்.
சிலாங்கூரில் அதன் சமூக ஈடுபாட்டின் ஒரு பகுதியாக, கூகுள் நிறுவனம் 'அருஸ் அகாடமி'யுடன் (Arus Academy) இணைந்து 'அனைவருக்குமான எதிர்காலத் திறன்கள்' (Future Skills for All) என்ற திட்டத்தை நிறுவியுள்ளது.
இது பள்ளி மாணவர்களுக்குக் குறியீட்டு முறையைக் (coding) கற்பிப்பதையும், டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான அடிப்படைத் திறன்களை அவர்களுக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வேலை தேடுபவர்கள் மற்றும் மாணவர்கள் தரவு மையத் துறையில் நுழைவதற்குத் தேவையான திறன்களைப் பெற உதவும் வகையில், அவர்கள் தரவு மைய செயல்பாட்டுப் பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பட்டறைகள் மற்றும் சர்வர் ஹேக்கத்தான்களை (server hackathons) நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இதேபோல், கூகுள் தனது முதலீடுகளால் ஏற்படும் பொருளாதார வாய்ப்புகளில் பின்தங்கிய சமூகங்களும் பங்கேற்க முடியும் என்பதை உறுதிப்படுத்த உழைத்து வருகிறது.
உதாரணமாக, 'சோல்ஸ் ஃபவுண்டேஷன்' (Souls Foundation) உடன் இணைந்து பூர்வீகக் குடியினரின் (Orang Asli) கிராமத்தில் சூரிய மின்சக்தி தகடுகளை (solar panels) நிறுவி, அவற்றைப் பராமரித்தல் மற்றும் இயக்குவதில் பயிற்சி அளிக்கும் ஒத்துழைப்பும் இதில் அடங்கும்.
"சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மிகவும் நலிவடைந்த மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்கள் இந்த வளர்ச்சியிலிருந்து விடுபடாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்," என்று சியா கூறினார்.
இதற்கிடையில், எல்மினா தரவு மையம் உள்ளூர் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்கும்.
அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் அது செயல்படத் தொடங்கியவுடன் நூற்றுக்கணக்கான நிரந்தர, உயர் மதிப்புமிக்க பணியிடங்களும் அடங்கும்.
ஹைப்பர்ஸ்கேல் தரவு மைய (hyperscale data centre) மேம்பாட்டில் உள்ளூர் ஒப்பந்ததாரர்கள், ஆலோசகர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் தங்களது நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ள கூகுள் அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.




