ஷா ஆலாம், ஆகஸ்ட் 20 : கிள்ளான், ஜாலான் தெங்கு கெலானாவில் உள்ள ஒரு தங்க நகைக் கடையில் இன்று காலை நடந்த கொள்ளை முயற்சி தொடர்பில், சந்தேக நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
இச்சம்பவம் குறித்து உறுதிப்படுத்திய தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சூப்ரிடெண்டண்ட் கமலாரிஃபின் அமான் ஷா, இன்று காலை சுமார் 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறினார்.
இந்த கொள்ளை முயற்சியின்போது, துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும், ஒருவருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
கூட்டுக்கொள்ளை முயற்சியின் போது காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக, குற்றவியல் சட்டம் செக்க்ஷன் 394-வது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கையைப் போலீஸ் திறந்துள்ளது.
மேலும், கொள்ளை முயற்சியின் போது துப்பாக்கியைக் காட்டிய குற்றத்திற்காக, துப்பாக்கிச் சட்டம் (கடுமையான தண்டனை) 1971, செக்க்ஷன் 4-இன் கீழும் இந்த சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, சமூக ஊடகங்களில் வைரலான காணொளியில், கையில் சுத்தியல்களுடன் சில நபர்கள் தங்க நகைக் கடைக்குள் நுழைந்து, நகைகள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகளை உடைத்துக் கொள்ளையடிக்க முயன்றனர்.
ஆனால், அவர்களின் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினர்.



