ஷா ஆலாம், ஆகஸ்ட் 18 - ஒரு துப்புரவுப் பணியாளராக கடந்த 12 வருடங்களாக மழையையும் வெயிலையும் தாங்கி, ஐந்து பிள்ளைகளை வளர்த்து சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு ஆளாக்கிய எம்.கவிதாவின் போராட்டம் தம்மை மனம் நெகிழச் செய்திருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தனது ஐந்து பிள்ளைகளும் தத்தம் துறைகளில் வெற்றி கண்டிருப்பது, கவிதாவின் கடும் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்தப் பலனாகும்.
அவரது அந்த தியாக உணர்வைப் பாராட்டி, SWCorp துப்புறவுப் பணியாளர் தினத்தின் சிறப்பு விருதளிப்பின்போது கவிதா அங்கீகரிக்கப்பட்டார் எனவும் பிரதமர் கூறினார்.
இவ்வேளையில், நாட்டின் தூய்மையைப் பேணுவதில் முக்கியப் பங்காற்றும் துப்புறவுப் பணியாளர்களுக்கு அவர் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
50 வயதாகும் கவிதாவின் நான்கு மகள்கள் முறையே விமானி, விமானப் பணிப் பெண், தாதி, இடைநிலைப் பள்ளி ஆசிரியை -யாக உள்ளனர்.
அவரது மகன், கவிதா பணிபுரியும் SWM Environment நிறுவனத்திலேயே பணிபுரிகிறார்.
அண்மையில், தங்களது தாயின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை சிறப்பித்து அவரது மகள்கள் வெளியிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.



