ஷா ஆலம், ஆகஸ்ட் 19 — ஷா ஆலம் மாநகர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த ‘2026 இலவச உணவுத் திட்டத்தின்’ கீழ், நேற்று செக்க்ஷன் 24-ல் உள்ள டெலிமா உணவு வளாகத்திற்கு (Delima Food Court) வருகை தந்த, முதல் 300 பேர் இலவச உணவை உண்டு மகிழ்ந்தனர்.
69-வது தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இத்திட்டத்தில், உணவு வளாகத்தில் உள்ள உணவு மற்றும் பான வியாபாரிகளின் ஒத்துழைப்புடன் பொது மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 ரிங்கிட் மதிப்புள்ள பற்றுச்சீட்டு (Voucher) வழங்கப்பட்டது.

மாநகர் மன்றத்தின் நிர்வாக எல்லைக்குள் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் பிரிவினர், தொழிற்துறை தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் உயர்கல்விக் கூட மாணவர்கள் ஆகியோரின் சுமையைக் குறைப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என ஷா ஆலாம் மாநகர் மன்றத்தின் சமூக மேம்பாட்டு இயக்குநர் ஷஹ்ரின் அகமத் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படுவதாகவும், இதன் முதல் கட்டம் செக்ஷன் 28-லும் (Section 28), இரண்டாவது கட்டம் செக்க்ஷன் 24-ல் உள்ள டெலிமா உணவு வளாகத்திலும் நடைபெற்றதாக அவர் கூறினார்.

மூன்றாவது கட்டத் திட்டம், ஷா ஆலாம் மாநகர் மன்றத்தின் 28-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அக்டோபர் மாதத்தில் அதன் நிர்வாக எல்லைக்கு உட்பட்ட வடக்குப் பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இலவச உணவுத் திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திற்கும் தலா RM3,000 நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
முதலில் வரும் 300 பேருக்கு தலா RM10 வீதம் இந்த உதவி வழங்கப்படுவதாகவும் ஷஹ்ரின் தெரிவித்தார்.
"இந்தத் திட்டம் மக்கள் இலவச உணவை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குவது மட்டுமல்லாமல், ஷா ஆலாம் மாநகர் மன்றப் பகுதிக்குள் உள்ளள உணவுக் கடைகளின் வருமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது என அவர் மேலும் கூறினார்.




