பத்து பாஹாட், ஆகஸ்ட் 17 : கடந்த மாத இறுதியில் வணிகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நால்வர் இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
மாஜிஸ்திரேட் முஸ்தகிம் சுகர்ணோ முன்னிலையில், எஸ். யோகேஸ்வரன் (40), லின் யோங் மிங் (26), என்.அச்சுதன் (32), ஹௌ ஹான் வெய் (33) ஆகியோர் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதால் , குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
ஜொகூர் பாரு, டாமன் ஸ்ரீ ஸ்கூடாயில் உள்ள ஜாலான் எமாஸ் புத்தே 2 பகுதியில், ஜூலை 29 பிற்பகல் 2.35 மணிக்கும், பத்து பாஹாட்டில் உள்ள சுங்கை தஞ்சுங் செம்ப்ரோங் பகுதியில் ஆகஸ்ட் 3 நண்பகல் 12.30 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் லோ கை சியான் (39) என்பவரைக் கொலை செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் செக்க்ஷன் 302 பிரிவு மற்றும் அதே சட்டத்தின் கீழ் செக்க்ஷன் 34 பிரிவின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அந்த சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது அதிகபட்சமாக 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் மரண தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில் 12 அடிகளுக்கு குறையாத பிரம்படி தண்டனையும் வழங்க முடியும்.
பிரேத பரிசோதனை , மரபணு அறிக்கைகள், மறைக்காணி (CCTV) மற்றும் தொலைபேசி தடயவியல் அறிக்கைகளுக்காக இவ்வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இம்மாதத் தொடக்கத்தில் இங்குள்ள பாரிட் ராஜா, சுங்கை தஞ்சுங் செம்ப்ரோங் பகுதியில் வலையால் சுற்றப்பட்டு, மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 வயது ஆடவரின் உடலைத் தொடர்ந்து ஐந்து சந்தேக நபர்களைப் போலீசார் கைது செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆரம்பகட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட நபர் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுவதற்கு முன்பு, கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மேலும், அவரது இரு கைகளும் ஒட்டும் நாடாவால் (pita pelekat) கட்டப்பட்டு, வலையால் உடல் சுற்றப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்டவரின் உடலை நீரில் மூழ்கடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஐந்து கற்களும் அவரது உடலிலிருந்து கண்டெடுக்கப்பட்டன.
முன்னதாக, கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் தனது கணவரைக் காணவில்லை என்று அவரது மனைவி போலிசில் புகார் அளித்திருந்தார்.



