2026 சுக்மா கபடி : கெடாவை வீழ்த்தி சிலாங்கூர் அணி அதிரடித் தொடக்கம்

14 ஆகஸ்ட் 2026, 8:45 AM
2026 சுக்மா கபடி : கெடாவை வீழ்த்தி  சிலாங்கூர் அணி அதிரடித் தொடக்கம்
2026 சுக்மா கபடி : கெடாவை வீழ்த்தி  சிலாங்கூர் அணி அதிரடித் தொடக்கம்

சுபாங் ஜெயா, ஆகஸ்ட் 14 : சுக்மா போட்டியில், ஆண்களுக்கான கபடி பிரிவின் குரூப் பி-க்கான (Kumpulan B) தொடக்க ஆட்டத்தில், சிலாங்கூர் அணி, கெடா அணியை 41-18 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தனது வெற்றிப் பயணத்தை இனிதே தொடங்கியுள்ளது.

அவ்வாட்டம் இன்று காலை செர்டாங் ஜெயா எம்பிஎஸ்ஜே அரங்கில் (Stadium MBSJ) நடைபெற்றது.

இரு அணிகளும் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்திய இவ்வாட்டத்தில் சிலாங்கூர் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது.

முதல் போட்டியிலேயே பலம் வாய்ந்த ஓர் எதிரணியை வீழ்த்தியது தமக்கு மிகுந்த திருப்தி அளிப்பதாகச் சிலாங்கூர் அணியின் பயிற்சியாளர் ஆர். அகிலன் தெரிவித்தார்.

சிலாங்கூர், கெடா கபடி அணிகளின் விளையாட்டாளர்களுடன் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் - படம் மீடியா சிலாங்கூர்

"இது எங்களுக்கு உண்மையிலேயே ஒரு கடுமையான போட்டியாக இருந்தது. எங்கள் பிரிவில் திராங்கானு அணியும் உள்ளது. திராங்கானுவுடன் ஒப்பிடும்போது கெடா அணி எங்களுக்குக் கடுமையான சவாலை அளித்தது. இருப்பினும் நாங்கள் அவர்களை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளோம்" என்று மீடியா சிலாங்கூரிடம் அவர் கூறினார்.

குரூப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து காலிறுதிக்கு முன்னேறுவதை உறுதி செய்வதற்காக, திராங்கானு அணிக்கு எதிரான அடுத்த போட்டிக்கு முன்பாக அணியின் பலவீனங்களைச் சரிசெய்வதே தங்களின் அடுத்த இலக்கு என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், கெடா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு நல்ல புள்ளி வித்தியாசத்தில் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதில் பெருமையடைவதாகச் சிலாங்கூர் அணியின் கேப்டன் என். தென்னரசு கூறினார்.

இருப்பினும், ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதை அவர் ஒப்புக்கொண்டார்.

"முதல் பாதியில் ஆட்டம் மிகவும் சமமாக இருந்தது, நாங்களும் புள்ளிகளை எடுத்தோம், அவர்களும் புள்ளிகளை எடுத்தனர். ஆனால், பிற்பாதியில் எங்கள் அணியின் மன உறுதி வலுவடைந்ததால் எங்களால் அதிக புள்ளிகளைப் பெற முடிந்தது" என்று அவர் கூறினார்.

நாளை திரெங்கானு அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியிலும் தங்களால் வெற்றி பெற முடியும் என்றும், அதன் மூலம் குரூப் பிரிவில் முதலிடத்தைப் பிடிப்போம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சிலாங்கூர் அணி தனது அடுத்த குரூப் பி ஆட்டத்தில் நாளை செர்டாங் ஜெயா எம்பிஎஸ்ஜே அரங்கில் திரெங்கானு அணியை எதிர்கொள்கிறது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.