கோம்பாக், ஆகஸ்ட் 14 : நேற்று இரவு செலாயாங் அரங்கில் நடைபெற்ற சுக்மா போட்டியின் மகளிர் காற்பந்து பிரிவுக்கான குரூப் ஏ ஆட்டத்தில், சிலாங்கூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சபா அணியைக் கடுமையாகப் போராடி வீழ்த்தியது.
இவ்வாட்டத்தின் 40-வது நிமிடத்தில் சிலாங்கூர் அணியின் மத்தியகள ஆட்டக்காரர் டெகன் சு-யின் பட்லர் (Tegen Su-Yin Butler) முதல் கோலை அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
எனினும், 45-வது நிமிடத்தில் சபா அணியின் டயான் அகிலா முகமது இம்ரான் (Dian Aqilah Mohamed Imran) பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி ஆட்டத்தைச் சமப்படுத்தினார் .
பிற்பாதியில், சிலாங்கூர் அணி தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில், தேசிய தற்காப்பு ஆட்டக்காரர் யூஸ்வெவானா காடியஸ் (Eusvewana Kadius), சக வீராங்கனை கொடுத்த பந்தைச் சாமர்த்தியமாக கோல் கம்பத்திற்குள் புகுத்தி அணியின் வெற்றி கோலை பதிவு செய்தார்.
இருப்பினும், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (95-வது நிமிடம்) சிலாங்கூர் அணியின் மத்தியகள ஆட்டக்காரர் ஜஃபிரா ஜுலைகா முகமது ஜுஹ்ரி (Zafirah Zulaikha Mohamad Zuhri) இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்றதால், அவருக்குச் சிவப்பு அட்டை (Red Card) விதிக்கப்பட்டு அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இறுதியில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற சிலாங்கூர் அணி, குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
சிலாங்கூர் அணியின் பயிற்சியாளர் ஒஸ்மேரா ஒமரோ (Osmera Omaro), சபா அணியின் சவாலை முறியடித்த தனது வீராங்கனைகளின் மன உறுதியைப் பாராட்டினார்.
"நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம். இருப்பினும், வீராங்கனைகள் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்திற்கு எனது வாழ்த்துகள்" என்று மீடியா சிலாங்கூரிடம் அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் அணி, வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி செலாயாங் அரங்கில் நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியை எதிர்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.





