ஷா ஆலாம், ஆகஸ்ட் 13 - செப்பாங் அனைத்துலக பந்தயத் தளத்தில் நடைபெறவுள்ள ஃபார்முலா 1 பந்தயத்திற்கான டிக்கெட் விற்பனை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
அந்த பந்தயத்தைக் காண்பதற்கான மூன்று நாள் அனுமதிச் சீட்டுகளின் விலைகள் மலேசியர்களுக்கும் , அனைத்துலக ரசிகர்களுக்கும் என தனியாகப் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் மிகவும் மலிவான விலையாக ஜி ஹில்ஸ்டாண்ட் (G Hillstand) பகுதிக்கான மூன்று நாள் அனுமதிச் சீட்டு 200 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், வெளிநாட்டு ரசிகர்களுக்கான மூன்று நாள் அனுமதிச் சீட்டின் விலை அவர்களின் அமரும் இடத்தைப் பொறுத்து 218.90 அமெரிக்க டாலர் முதல் 566.05 டாலர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
'மைகாட்' (MyKad) அடையாள அட்டை வைத்திருக்கும் உள்ளூர் ரசிகர்களுக்குக் கூடுதல் சலுகை அளிக்கும் வகையில் மிகவும் மலிவான விலையில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. மொத்தமாக ஆறு பிரிவுகளில் இந்த டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
அனைத்துலக ரசிகர்களுக்கான டிக்கெட் கட்டணங்கள் அமெரிக்க டாலர் மதிப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ரசிகர்கள் அமரும் இடங்களைப் பொறுத்து டிக்கெட்டின் விலையும், அவர்களுக்குக் கிடைக்கும் வசதிகளும் மாறுபடுகின்றன.
பிரதான மற்றும் பிற முக்கிய கிராண்ட்ஸ்டாண்ட் பகுதிகளைத் தேர்வு செய்பவர்களுக்கு, வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கும் மேற்கூரை வசதியுடன், சொகுசாக அமர்ந்து பார்ப்பதற்கான இருக்கைகளும் ஒதுக்கப்படும்.
அதேவேளையில், குறைந்த விலையிலான ஹில்ஸ்டாண்ட் பகுதிகளைத் தேர்வு செய்பவர்கள், திறந்தவெளியில் உள்ள புல்வெளிப் பகுதிகளில் அமர்ந்து இயற்கையான சூழலில் பந்தயத்தைக் கண்டு ரசிக்கலாம்.
இந்த டிக்கெட் விலைகள் அனைத்தும் தற்போதைய அரசாங்க வரிகளையும் உள்ளடக்கியே அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பந்தயத்தைக் குடும்பத்தோடு வந்து காண்பதற்கும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, சிறு பிள்ளைகள் டிக்கெட் கட்டணத்தில் குறிப்பிட்ட அளவு தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆனால், இந்தத் தள்ளுபடியானது புல்வெளிப் பகுதிக்கான மிகக் குறைந்த கட்டண டிக்கெட்டுகளுக்குப் பொருந்தாது.
அதேபோல, மிகச் சிறிய பிள்ளைகளுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி அனுமதி முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ளது. எனினும், அவர்களுக்குத் தனி இருக்கைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்பதால் அவர்கள் பெற்றோருடன் இணைந்து அமர வேண்டும்.
அக்டோபர் 2-ஆம் தேதியிலிருந்து 4-ஆம் தேதி வரையிலான (வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை ) முழு பந்தய வார இறுதி நாட்களையும் உள்ளடக்கிய இந்த டிக்கெட்டுகளை, பஹ்ரைன் அனைத்துலக பந்தயத் தளத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று ரசிகர்கள் தற்பொழுது முன்பதிவு செய்து கொள்ளலாம்.




