ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட் 13: மலேசிய சந்தையில் விற்கப்படும் அப்பளங்கள் அல்லது 'பிரையம்ஸ்' (fryums) வகைகளில் அதிகப்படியான செயற்கை நிறமூட்டிகள் அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்கள் கலந்துள்ளதா என்பதை மலேசிய சுகாதார அமைச்சு உடனடியாக விசாரிக்க வேண்டும்.
அப்படியிருந்தால் அவற்றை சந்தையிலிருந்து அகற்ற வேண்டுமென பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொண்டது.
பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு இந்த உணவுப் பொருட்கள் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக அதன் தலைவர் மொஹிதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அண்மையில் அப்பளங்களில் அதிகப்படியான நிறமூட்டிகள் கலக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அவற்றின் விற்பனைக்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிரகாசமான நிறங்களை உடைய அப்பளங்கள் மலேசியாவின் உள்ளூர் சந்தைகளில் நூறு கிராம் வெறும் ஒரு 1.25 சென் என மிக மலிவான விலையில் தாராளமாகக் கிடைக்கின்றன.
கவர்ச்சிகரமான நிறமும் மலிவான விலையும் பல குடும்பங்களை இதனை நோக்கி ஈர்ப்பதால் பயனீட்டாளர்கள் மற்றும் சிறு பிள்ளைகள் இந்த ஆபத்தான இரசாயன நிறமூட்டிகளின் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் கணிசமாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி இத்தகைய செயற்கை நிறமூட்டிகளை அதிக அளவில் உட்கொள்வதால் செரிமானப் பிரச்சினைகள், ஒவ்வாமை மற்றும் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்துமென குறிப்பிட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகப் பயன்படுத்தப்படும் இந்த செயற்கை நிறமூட்டிகளுடன் நீண்ட காலம் தொடர்பில் இருப்பது புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும்.
குறிப்பாக இது குழந்தைகளின் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்தி கவனக்குறைவு மற்றும் அதிவேகக் கோளாறு போன்ற மனநல சிக்கல்களை உண்டாக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அதையடுத்து நாடு முழுவதும் உள்ள பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள், இரவுச் சந்தைகள் மற்றும் சாலையோரக் கடைகளில் விற்கப்படும் வண்ண அப்பளங்களை மாதிரியாக எடுத்து உடனடியாக ஆய்வுக்கூட சோதனை செய்ய சுகாதார அமைச்சு முன்வர வேண்டுமென பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொண்டது.
அதோடு, பயனீட்டாளர்கள் செயற்கை நிறங்கள் இல்லாத உளுந்தம் பருப்பு மற்றும் அரிசி மாவு கொண்டு பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட அப்பளங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துமாறு அச்சங்கம் அறிவுறுத்தியது.



