சிரம்பான், ஆகஸ்ட் 13 : போர்ட் டிக்சன்,சுங்கை மென்யாலா (Sungai Menyala, Port Dickson ) பகுதியில் உள்ள துப்பாக்கிச் சுடும் தளத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு பயிற்சியின் போது ராணுவ வீரர் ஒருவர் அவரது சக ஊழியரால் தவறுதலாக சுடப்பட்டதில் முகத்தில் காயமடைந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து நெகிரி செம்பிலான் துணை போலீஸ் ஆணையர் நஷாருதின் ஷெரிப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பாதிக்கப்பட்ட ராணுவ வீரரும் மற்ற பணியாளர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த எதிர்பாராத விபத்து நேரிட்டதாகக் குறிப்பிட்டார்.
காயமடைந்த வீரர் உடனடியாக போர்ட் டிக்சன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிரம்பானில் உள்ள துங்கு ஜாபர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தற்போது அவர் அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவரது உடல்நிலை சீராக உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, சம்பவத்திற்குக் காரணமான மற்றொரு ராணுவ வீரரை போலீசார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஆயுதச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அலட்சியமாகவும் பொறுப்பற்ற முறையிலும் செயல்பட்டு மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவித்தல் மற்றும் காயம் ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



