ஷா ஆலம், ஆகஸ்ட் 12 : வாடகை செலுத்த முடியாததால் வீடுகளை இழக்கும் குடும்பங்களுக்கு உதவும் வகையில், ஒவ்வோர் ஊராட்சித் தரப்பின் நிர்வாகப் பகுதியிலும் தற்காலிக தங்குமிட வீடுகளை (Rumah Transit) சிலாங்கூர் அரசு ஏற்படுத்த வேண்டுமென செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் பரிந்துரைத்தார்.
இந்த யோசனை இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS-2) கீழ் இன்னும் சொந்த வீடு இல்லாத சிலாங்கூர் மக்களுக்கு 200,000 மலிவு விலை வீடுகளை வழங்குவதற்கான மாநில அரசின் இலக்குடன் ஒத்துப்போகிறது என்றாரவர்.
"தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள குடும்பங்களுக்கு ஒரு தற்காலிகத் தீர்வாக, ஒவ்வோர் ஊராட்சித் தரப்பின் கீழும் சுமார் ஐந்து முதல் 10 வீடுகள் வரையிலான வசதியை வழங்கலாம் என இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் , இரண்டாவது சிலாங்கூர் திட்ட (RS-2)விவாதத்தின் போது அவர் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, RS-2 இன் மூலம் கொண்டு வரப்படவிருக்கும் 'வாழத் தகுந்த நகரம்' (Liveable City) என்ற கொள்கை, குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் நேரடியாக உணரும் வகையில் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகளின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
"ஒரு வாழத் தகுந்த நகரம் என்பது நவீன வளர்ச்சியை மட்டும் கொண்டிருப்பது அல்ல, மாறாக பாதுகாப்பான சாலைகள், சீராக இயங்கும் வடிகால்கள், முறையாக பராமரிக்கப்படும் பூங்காக்கள், விளையாட்டு வசதிகள், நல்ல பள்ளிகள், சுகாதார சேவைகள் மற்றும் சமூகக் கூடங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
அடிப்படை உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த கொள்கையின் கீழ் செந்தோசா தொகுதிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
அதே வேளையில், செந்தோசா பகுதியில் ஏற்படும் வெள்ளப் பிரச்சினை குறித்தும் குணராஜ் பேசினார்.
மேலும் RS-2 இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெள்ளத் தடுப்புத் திட்டத்தை அவர் வரவேற்றார்.
வெள்ளத்தைக் கையாள்வதற்கான முயற்சிகள் பெரிய அளவிலான திட்டங்களை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது என்றும், மாறாக தற்போதுள்ள வடிகால் உட்கட்டமைப்பைப் பராமரிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"மழைக்காலத்தில் அனைத்தும் சீராக இயங்குவதை உறுதி செய்ய, நாம் வடிகால்கள், வாய்க்கால்கள், ஆறுகள், பம்ப் அமைப்புகள் மற்றும் அவற்றின் வழக்கமான பராமரிப்பு ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.



