ஷா ஆலம், 11 ஆகஸ்ட்: இந்தியாவுக்குள் நான்கு கிலோகிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சாவைக் கடத்திய குற்றத்திற்காக கடந்த சனிக்கிழமை, மலேசியர் ஒருவர் சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
பேராக்கைச் சேர்ந்த 54 வயதுடைய அந்த ஆடவர் , தாய்லாந்தின் பங்காக்கிலிருந்து சென்னை விமான நிலையத்தை வந்தடைந்ததும் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அந்த கைது நடவடிக்கையை புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJN) இயக்குநர் டத்தோ ஹுசைன் உமர் கான் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வத் தகவலை இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவிடமிருந்து (NCB) பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
"முதற்கட்ட விசாரணையில், கஞ்சா கடத்திய மலேசிய ஆடவருக்கு , அரச மலேசிய போலீஸ் படையின் கீழ் எந்தவொரு பழைய குற்றப் பதிவுகள் இல்லை என்பது தெரியவந்தது.
கடந்த ஆகஸ்ட் 8- ஆம் தேதி , சந்தேக நபர் தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் பங்காக்கிலிருந்து சென்னைக்கு பயணம் செய்தார்.
இருப்பினும், சென்னை சுங்கத்துறையினர் அவரது உடமைகளை விரிவாக சோதித்தபோது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கிலோகிராம் எடையுள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருளைக் கண்டெடுத்தனர்" என்று அவர் கூறினார்.
கைதான அந்த ஆடவர் தற்போது இந்திய சுங்கத்துறையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, 1985 -ஆம் ஆண்டின் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக ஹுசைன் தெரிவித்தார்.
"இந்த கைது தொடர்பில் கூடுதல் விவரங்களைப் பெறவும், இதில் தொடர்புடையதாகக் கருதப்படும் கடத்தல் கும்பலின் பின்னணியை விசாரிக்கவும் நாட்டின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை, இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும்," என்று அவர் கூறினார்.
இந்தியாவின் 1985 -ஆம் ஆண்டின் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் , வணிக ரீதியிலான அளவில் போதைப்பொருட்களை கடத்துவது அல்லது வைத்திருப்பது போன்ற குற்றங்களுக்கு 10 முதல் 20 ஆண்டுகள் வரை கட்டாய சிறைத்தண்டனையும், கடுமையான அபராதமும் விதிக்க முடியும்.
இதனிடையே மலேசிய ஆடவரின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள மலேசிய தூதரகம், அனைத்துலக சட்ட நடைமுறைகளின்படி அடிப்படை தூதரக உதவிகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




