ஷா ஆலம், ஆகஸ்ட் 10 : சிலாங்கூர் மாநில அரசு, உயர்தர ஆராய்ச்சிகளுக்கு நிதியளிப்பதற்காக 35 லட்சம் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
SELidik எனப்படும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டின் ஆராய்ச்சி, புத்தாக்க மானியத்தின் கீழ் அந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில் 25 லட்சம் ரிங்கிட் நிதி, சிலாங்கூர் இஸ்லாமிய பல்கலைக்கழகம் (UIS), சிலாங்கூர் பல்கலைக்கழகம் (UNISEL) ஆகிய இரு மாநில அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும்; மீதமுள்ள 10 லட்சம் ரிங்கிட் நிதி சிலாங்கூரில் உள்ள இதர உள்ளூர் பல்கலைக்கழகங்களுக்குத் திறக்கப்படவுள்ளது என மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார்.
மாநில அரசின் கொள்கைகளை உருவாக்குவதற்கும் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் ஆதரவான ஆராய்ச்சிகளை வலுப்படுத்துவதற்காக இந்த 'SELidik' திட்டம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
"சிலாங்கூர் மாநில ஆராய்ச்சி மானியம் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
சராசரியாக, ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தங்களது ஆராய்ச்சி மானியத்திற்காக தலா RM12 லட்சத்து 50,000 ரிங்கிட்டை பெறும்.
இதர 10 லட்சம் ரிங்கிட் நிதி சிலாங்கூர் முழுவதும் உள்ள உள்ளூர் பல்கலைக்கழகங்களுக்குத் திறக்கப்படும் என்று அவர் கூறினார்.
இங்குள்ள சுல்தான் சலாஹுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிட வளாகத்தில் நடைபெற்ற 'SELidik 2026' தொடக்க விழாவில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தபோது மந்திரி பெசார் இந்த விபரங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.
மேலும் விவரித்த அமிருதின், இந்த மானியத்தைப் பெறும் ஒவ்வொரு ஆராய்ச்சித் திட்டமும், இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தில் (RS-2) கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ஆறு முக்கிய இலக்குகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறினார்.




