மரம் சரிந்து விழுந்தது: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்!

9 ஆகஸ்ட் 2026, 9:30 AM
மரம் சரிந்து விழுந்தது: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்!

ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட் 9: இங்குள்ள மேக்கலிஸ்டர் சாலையில் (Jalan Macalister), காரின் மீது மரமொன்று விழுந்ததில், அக்காரில் பயணம் செய்த வயதான தம்பதியரும் அவர்களது பேரக்குழந்தையும் காயமடைந்தனர்.

காலை 9.12 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், அதைத் தொடர்ந்து ஜாலான் பேராக் தீயணைப்பு-மீட்பு நிலையத்திலிருந்து (BBP) எட்டு பணியாளர்கள் கொண்ட குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, பினாங்கு மலேசிய தீயணைப்பு மீட்புத் துறையின் (JBPM) நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் ஜான் சாகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

காருக்குள் சிக்கிக்கொண்ட மூவரும், தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்பே அங்கிருந்த பொதுமக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, சம்பவ இடத்தில் விழுந்த மரத்தின் எஞ்சிய பகுதிகளை வெட்டி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்பணியில் தீயணைப்பு வீரர்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து மதியம் 12 மணி வரை தீவிரமாக ஈடுபட்டதாக ஜான் சாகுன் குறிப்பிட்டார்.

இதனிடையே, காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சரும், தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் ஹுய் யிங் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக அச்சாலையும் மூடப்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.