ஷா ஆலம், ஆகஸ்ட் 9 - விவசாய உணவுத் துறையில் கூட்டு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைக் கண்டறிவதற்காக சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (PKPS) கடந்த செவ்வாய்க்கிழமை சீனாவுக்கு பேராளர் குழுவொன்றை அனுப்பி வைத்தது.
அக்குழுவிற்கு PKPS குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ முகமட் கைரில் முகமட் ராசி தலைமை தாங்கினார்.
அவர் சீனாவின் நவீன பால் பண்ணை நிறுவனத்திற்குச் (China Modern Dairy Holdings Ltd) சென்று, கால்நடைத் துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பச் செயல்பாடுகளைப் பார்வையிட்டார்.
அவர்களுக்கு அப்பண்ணை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜு சியாவூய் விளக்கமளித்தார்.
அந்த பயணத்தின் போது, இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இரு தரப்பினரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டனர்.
நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவின் மூலமாக விவசாய உணவுத் துறை இந்த தகவலைப் பகிர்ந்துக் கொண்டது.
இந்த ஒத்துழைப்பு வெறும் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளை மட்டும் உருவாக்கவில்லை; நிலையான விவசாய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் சிலாங்கூர் மற்றும் மலேசியாவின் விவசாய உணவுத் துறையின் வளர்ச்சிக்கும் பங்களிப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்று முகமட் கைரில் கூறினார்.
சீனாவில் ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்ந்ததற்காக PKPS நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்து பல ஃபேஸ்புக் பயனர்கள் நேற்று கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.
இது சிலாங்கூரின் விவசாய உணவுத் துறையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.








