பெய்ஜிங், ஆகஸ்ட் 8 - குளிரூட்டிக்குப் பதிலாகக் குறைந்த செலவில், உடலைக் குளிர்விக்க சாம்பல் பூசணிக்காயைக் கட்டிப்பிடித்துத் தூங்கும் ஓர் இணைய மீம் சீன சமூக ஊடகங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
ஆனால் இதனால் குளிர் சார்ந்த உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் இரவில் பூசணிக்காய் வெடிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
சாம்பல் பூசணிக்காயில் 95 சதவீதத்திற்கும் அதிகமாக நீர்ச்சத்து உள்ளதால் இது தண்ணீராலானது போன்ற ஒரு குளிர்ச்சியான தலையணையைப் போல் செயல்படுகிறது.
இதன் வெளிப்புறத் தோல் பொதுவாக அறையின் வெப்பநிலையை விட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கும் என்பதால் இதை மனித உடலோடு சேர்க்கும்போது உடலின் மேற்பரப்பு வெப்பத்தை உறிஞ்சி குளிர்ச்சியைத் தருகிறது.
வைரலாகியிருக்கும் மீம் ஒன்றில், 7.5 கிலோ எடையுள்ள ஒரு பெரிய சாம்பல் பூசணிக்காய் எடுத்துச் செல்லக்கூடிய, மின்சாரம் தேவையில்லாத, சத்தமில்லாத ஒரு குளிரூட்டி என்று நகைச்சுவையாக விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த குளிர்ச்சி தரும் தந்திரம் ஒன்றும் நவீன காலக் கண்டுபிடிப்பு அல்ல என்றும் பழங்கால சீன மக்கள் தகிக்கும் கோடை இரவுகளைக் கடக்க இதே முறையைப் பயன்படுத்தியதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சாம்பல் பூசணிக்காயுடன் தூங்குவது முக்கியமாக கோடை வெப்பத்தால் ஏற்படும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கும் பதற்றம் அல்லது கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மட்டுமே வேலை செய்யும் என்று , பெய்ஜிங் சீன மருத்துவப் பல்கலைக்கழகத்தின் டோங்ஃபாங் மருத்துவமனையின் மனநல மருத்துவத் துறை மருத்துவரான டிங் யியுன் கூறியுள்ளார்.
ஆனால் குளிர்ச்சியால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய உடல்வாகு கொண்டவர்கள் குளிர் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க இந்த இணைய ட்ரெண்டைப் பின்பற்றக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்.



