கோலாலம்பூர், ஆகஸ்ட் 8 - பி.கே.ஆர் (PKR) கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா அன்வார் விலகியிருந்தாலும், கட்சி மீதான அவரது ஈடுபாட்டினை அது பாதிக்காது என தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
நுருல் இசா தொடர்ந்து கட்சியின் உறுப்பினராக நீடிப்பார் என்றும், கட்சியின் போராட்டத்திற்கு அவர் தொடர்ந்து ஆதரவளிப்பார் என்றும் ஃபஹ்மி கூறினார்.

அதே வேளையில், கூட்டணியில் உள்ள உறுப்புக் கட்சிகள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதில் உறுதியாக உள்ளன என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
நுருல் இசா தனது பிஎச்டி (PhD) முனைவர் பட்டப் படிப்பில் கவனம் செலுத்துவதற்காகப் பதவியிலிருந்து விலகி, கால அவகாசம் கேட்டுள்ளதாகவும், கட்சியின் தலைமைத்துவப் பொறுப்புகள் அதன் தற்போதைய தலைமைத்துவக் கட்டமைப்பின் கீழ் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த பதவி விலகல், அரசாங்கத்திற்கான ஆதரவு குறைந்து வருவதற்கான அறிகுறியாகப் புரிந்து கொள்ளப்படக் கூடாது என்று கூறிய ஃபஹ்மி, இதுபோன்ற முன்னேற்றங்களைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தானாகவே அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதில்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.
இன்று செராஸில் உள்ள இம்பி மண்டபத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுடன் (PIBG) இணைந்து 'பாதுகாப்பு இணைய கலந்துரையாடலைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.




