ஷா ஆலம், ஜூலை 30: வரும் ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் (SACC) நடைபெறவுள்ள '2026 சிலாங்கூர் மெகா ஜாப்கேர் ' (Mega Jobcare Selangor 2026) வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட முதலாளிகள் பங்கேற்று 10,000 வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளனர்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த மெகா ஜாப்கேர், வேலை தேடுபவர்கள் நேரடியாக நேர்காணலில் பங்கேற்று வேலைகளைப் பெறுவதற்கான பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் என்று சிலாங்கூர் மாநில அரசாங்க செயலக அலுவலகம் தெரிவித்தது.
வேலை தேடுபவர்கள் வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், MYFutureJobs மூலமாக வேலைப் பொருத்த சேவை (Job Matching), இலவச சுயவிவரக் குறிப்பு (Resume) சரிபார்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் ஆலோசனை ஆகியவை இந்த முகாமில் வழங்கப்படும் .
பிளாட்ஸ் (PLATS) தொழில்வழிகாட்டி திட்டம் மற்றும் தகுதிச் சரிபார்ப்பு, ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) வேலைவாய்ப்பு மாஸ்டர்கிளாஸ் போன்ற இதர சுவாரஸ்யமான நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.
"இவற்றுடன்,தொழில் மற்றும் சுய முன்னேற்றம் குறித்த பல்வேறு தலைப்புகளில் 'பாக்கெட் டாக்' (Pocket Talk) கலந்துரையாடல் அமர்வுகள், சுகாதாரப் பரிசோதனை, பல் மருத்துவச் சேவை, இரத்த தான முகாம், அரசு நிறுவனங்களின் நடமாடும் முகப்புகள், பிளாட்ஸ் (PLATS) உணவு லாரிகள் மற்றும் ஜுவாலான் ரும்பூன் சிலாங்கூர் (Jualan Rumpun Selangor) விற்பனை ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன," என்று அச்செயலகம் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
அதே வேளையில், வேலையிழந்தவர்களுக்கான உதவி ஊக்கத்தொகையாக டச் அண்ட் கோ இ-வாலட்டில் (Touch 'n Go eWallet) 50 ரிங்கிட் கிரெடிட்டை மாநில அரசு வழங்கவுள்ளதாக மாநில அரசாங்க செயலகம் தெரிவித்தது.
மேலும், இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு முன்கூட்டியே வரும் 2,200 பார்வையாளர்களுக்கு, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 10 ரிங்கிட் மதிப்புள்ள டச் அண்ட் கோ இ-வாலட் கிரெடிட்டைப் பெறும் வாய்ப்பும் உள்ளது.
"வேலையிழந்த அல்லது சொக்சோவின் வேலைவாய்ப்பு காப்பீட்டு முறையின் (SIP) கீழ் பயன் பெறுபவர்களில் முதலில் வரும் 1,000 வேலை தேடுபவர்களுக்கு இது பொருந்தும்.
இந்த 'மெகா ஜோப்கேரில்' பங்கேற்பதற்கான முன்கூட்டிய பதிவை பின்வரும் இணைப்பின் மூலம் செய்யலாம்: https://careerfair.myfuturejobs.gov.my/careerfair/socsocareerfair/daftarjobseeker.php?id=NzM0OA==.




