சைபர்ஜெயா: இலக்கவியல் திறனாற்றலை மேம்படுத்துவதற்காக, சுமார் ஒரு லட்சம்
இளைஞர்கள் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருட்களுக்கான இலவச சந்தாவைப் (Subscription) பெறவுள்ளனர்.
18 முதல் 30 வயதுக்குட்பட்ட மலேசியர்களுக்கான 'AI Untuk Rakyat' எனும் திட்டத்துக்கான பதிவு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்கும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
'Rakyat Digital' தளத்தில் வழங்கப்படும் AI பாடப்பிரிவுகளை முழுமையாக முடிக்கும் பங்கேற்பாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட AI மென்பொருளை மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்துவதற்கான இலவச சந்தாவைப் பெறுவார்கள்.
இந்த பாடப்பிரிவுகள் AI Safety, Cyber SAFE, Agentic AI, Generative AI மற்றும் Cloud Untuk Rakyat ஆகிய தலைப்புகளை உள்ளடக்கியுள்ளன.
சைபர்ஜெயாவில் 'AI Malaysia Bhd' அமைப்பின் தொடக்க விழாவில் உரையாற்றியபோது பிரதமர் இந்த தகவலை வெளியிட்டார்.
அரசாங்கம்,தொழில்துறை, கல்வித்துறை ஆகியவற்றுக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்போடு, மலேசியாவை ஒரு AI நாடாக மாற்றுவதற்கான நாட்டின் பரந்த இலக்கின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
"மலேசியா AI திறனாற்றலை மேம்படுத்த வேண்டும்;
டிஜிட்டல் உட்கட்டமைப்புகளும் மேம்படுத்த வேண்டும்; மாணவர்களுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
அத்தொழில்நுட்ப பயன்பாட்டை ஊக்குவிக்கும் அதே வேளை, பொறுப்பான AI நிர்வாகத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகளையும் அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும்" என்று அன்வார் கூறினார்.
முன்னதாக, AI Malaysia Bhd அமைப்பின் தொடக்க விழாவில் இலக்கவியல் அமைச்சர் கோவிந்த் சிங் டியோ, தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில், அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மற்றும் இலக்கவியல் அமைச்சகத்தின் பொதுச்செயலாளர் ஃபேபியன் பிகார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.




