ஈப்போ, ஜூலை 28 : செமோர் (Chemor) பகுதியில் கடந்த வாரம் 118.87 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கடத்தியதாக ஆறு சகோதரர்கள் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 28) குற்றம் சாட்டப்பட்டது.
முகமட் அஃபாண்டி சுல்காஃப்லி (41), அவருடைய சகோதரர்களான முகமட் கைருல் அஸ்மில் (40), ஷாரூல் அஸ்வான் (38), முகமட் ஷா ஹெர்மன் (35), முஹம்மட் அமிருல் (29) மற்றும் முகமட் ஹஃபிஸி (27) ஆகிய ஆறு பேர் மீது அக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 உடன் இணைத்து வாசிக்கப்பட்ட, 1952 அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B(1)(a)-இன் கீழ் அவர்கள் அனைவரும் அக்குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
வேலையில்லாதவர்களான அந்த ஆறு பேரும், மாஜிஸ்திரேட் நோரிசான் ரிடுவான் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசித்துக்காட்டப்பட்டதை அடுத்து, தங்களுக்கு அக்குற்றச்சாட்டு புரிகிறது என்பதைத் தெரிவிக்கும் வகையில் தலையசைத்தனர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டதால், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
மேலும் அவர்களை உத்தரவாதத்தில் விடுவிக்கவும் மறுக்கப்பட்டது.
இந்த வழக்கில் கூட்டாகக் குற்றம் சாட்டப்பட வேண்டிய முகமட் இஸ்மாயில் போஹான் (43) என்ற மற்றொரு நபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் நீதிமன்றத்திற்கு வர முடியவில்லை.
இஸ்மாயில் மீதான குற்றச்சாட்டு ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் மதிய வேளையில் வாசித்துக்காட்டப்படும் என்று துணை அரசு வழக்குரைஞர் ஜாரிஸ் சோஃபியா ஜைனுடின் தெரிவித்தார்.
குற்றச் சாட்டை எதிர்நோக்கியுள்ள ஏழு பேரும் கடந்த ஜூலை 21 அன்று இரவு 9.20 மணியளவில், செமோர், கம்பங் செ ஜைனல் தம்பஹான் 1, லாலுவான் உசாஹாவில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.



