புது டில்லி, ஜூலை 22 – இந்தியாவின் கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அந்நாட்டின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
கல்வி துறையில் சீர்த்திருத்தங்களைக் கோரி தற்போது அந்நாட்டில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக எதிர்கட்சிகளும் இறங்கியுள்ளன.
சுமார் 20 லட்சம் மாணவர்களைப் பாதித்த நீட்-மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுத் தாள்கள் கடந்த மாதம் கசிந்ததைத் தொடர்ந்து, இந்த பேரளவிலான மாணவர் போராட்டம் வெடித்தது.
இப்போராட்டம், பிரதமர் நரேந்திர மோடி 2014-இல் ஆட்சிக்கு வந்ததற்குப் பின்னர் அவர் சந்திக்கும் மிகப்பெரிய இளைஞர் சவாலாக உருவெடுத்துள்ளது.
திங்கட்கிழமை பல்லாயிரக்கணக்கான இளம் போராட்டக்காரர்கள் புது டில்லியின் சாலைகளில் இறங்கிப் போராடினர். அவர்களைக் கலைந்து செல்ல வைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளையும் தடியடியையும் பயன்படுத்தியதால் மோதல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை புது டில்லியில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரண்டனர்.
அவர்களில் பலர் கறுப்பு உடை அணிந்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரும் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
பின்னர் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் நடத்தியதாகக் கூறப்படும் வன்முறை குறித்தும், தேர்வுத் தாள் கசிவு குறித்தும் விவாதிக்கக் கோரினர்.
இதனால் அவையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்த விவகாரம் குறித்தும், பரந்த கல்விச் சீர்திருத்தங்கள் குறித்தும் விவாதிக்கத் தாங்கள் தயாராக இருப்பதாக பிரதமர் மோடியும் கல்வியமைச்சர் பிரதானும் தெரிவித்தனர்.
முன்னதாக, நேற்று செவ்வாய்க்கிழமை அன்று, ராகுல் காந்தியின் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸ், மோடியின் இல்லத்திற்குச் செல்லும் நுழைவாயிலுக்கு வெளியே குந்தியிருப்பு போராட்டத்தை நடத்தியது.
போராட்டத்தை முடிக்க மறுத்த ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா வத்ரா உட்பட பல மூத்த எதிர்க்கட்சித் தலைவர்களைப் போலீஸார் கைது செய்து, பின்னர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் விடுவித்தனர்.




